படத்தில் இருந்து தியாக தீபம் திலீபனை கதிரையில் கொண்டு வந்து இருக்க செய்த திருகோணமலை பொலிஸார்

தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து மரணித்த தியாக தீபம் திலீபன் அவர்களின் உண்ணாவிரதத்தின் இறுதி நாளாகிய இன்றைய தினம் (26.09.2023) தமிழர்களின் தலைநகரம் திருக்கோணமலையில் நினைவேந்தல் மேற்கொள்ள ஒழுங்கமைப்புகள் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் காலை 9 மணி அளவில் நினைவேந்தல் செய்ய ஒழுங்கு செய்யப்பட்டிருந்த குளக்கோட்டம் மண்டபத்தில் குறித்த பிரிவுக்கு பொறுப்பான திருக்கோணமலை துறைமுக பொலிஸாரால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குவிக்கப்பட்டதுடன், நினைவேந்தல் மேற்கொள்ள திருக்கோணமலை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி பயாஸ் ரசாக் அவர்களின் அனுமதியுடன் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில் மக்கள் மண்டபத்துக்கு வர ஆரம்பித்தபோது பொலிஸார் தடை உத்தரவில் இருந்த நபர்களையும், குறித்த நிகழ்வை குறித்த மண்டபத்தில் செய்யவும் தடை ஏற்படுத்தினர்.
நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்களின் பெயருக்கும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பெயர் குறிப்பிட்டு தடை உத்தரவு பெறப்பட்டு, இருந்தபோதிலும் தடை உத்தரவு முற்றிலும் சிங்களத்தில் காணப்பட்டதுடன், தமிழ் பிரதிகளோ அல்லது தமிழ் மொழியில் மொழிபெயர்த்து கூறக்கூடிய பொலிஸாரோ குறித்த இடத்தில் இருக்கவில்லை என்பது முரண்பாட்டை ஏற்படுத்தியது.
இதன்போது துறைமுக பொலிஸார் வடக்கு கிழக்கில் பணிபுரிவதற்காக மொழித் திறன் பரீட்சைகளில் சித்தியடைந்திருந்தாலும், அதற்கான கொடுப்பனவுகளை பெற்று வரும் நிலையிலும் கூட தமிழ் மொழியில் உரையாட முடியாமையினால் அவ்விடத்தில் நீண்ட நேர முரண்பாடுகள் ஏற்பட்டது.
துறைமுக பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு வருகை தந்திருந்த போதிலும், ஒருவருக்கும் தமிழ் தெரிந்திருக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயம். மேலும் தடை உத்தரவில் சிலரின் பெயர்கள் குறிப்பிட்டு இருந்த போதிலும், ஏனையோரும் நிகழ்வை மேற்கொள்ள முடியாது என பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் பொதுமக்கள் ஒன்றிணைந்து மண்டபத்தினுள் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலை அவரின் படத்தை காட்சிப்படுத்த முடியாத நிலையில் கதிரை ஒன்றில் அவர் அமர்ந்திருப்பதாக உருவகித்து மாலை அணிவித்து, மெழுகுதிரி ஏற்றி நினைவேந்தலை மேற்கொண்டனர். சுமார் 70-க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் தங்களுடைய நினைவேந்தல் உரிமையெனும் அடிப்படை உரிமை இந்த நாட்டில் மீறப்படுவது தொடர்பில் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர்.
பின்னர் பொலிஸார் தமிழில் தடை உத்தரவை வாசிப்பதற்காக தமிழ் பொலிஸ் நபர் ஒருவரை தேடி திரிந்து கொண்டிருந்த வேளையில் நினைவேந்தல் இடம் பெற்று முடிவடைந்து இருந்தது. இதனைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து வெளியேறினர். அந்த வேளையில் நினைவேந்தலுக்காக திலீபன் அவர்களின் உருவப் படத்தை கொண்டு வந்திருந்த நபர் ஒருவர் மீது பொலிஸார் அவரை "வீட்டுக்கு வந்து கைது செய்வோம்" என்று அச்சுறுத்தினர்.
இதனால் அவ்விடத்தில் சிறிது குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் ஒழுங்கமைப்பாளர்கள் திருக்கோணமலை நீதவான் நீதிமன்றத்தில் தங்களுக்கு தடை உத்தரவு வழங்கப்பட்ட காரணம் தொடர்பில் தங்களின் கருத்தை தெரிவிக்க சென்றிருந்த வேளையில் 27.09.2023 குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்ற அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இவ்விடத்தில் ஒரு மனிதரின் நினைவேந்தும் உரிமையானது தொடர்ச்சியாக இலங்கையின் அரச கட்டமைப்பினால் மறுக்கப்பட்டு வருவது வெளிப்படையாக தெளிவாகியதுடன், அவர்களின் மொழியுரிமையும் கடுமையாக மீறப்படுவது தெளிவாகியது.
மேலும் ஊடகவியலாளர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு தடை உத்தரவை பெறுவது ஊடக அச்சுறுத்தலாகயும், அடக்கு முறையாகவும் பார்க்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சாசனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நினைவேந்தல் உரிமை என்பது இலங்கை அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக பலதரப்பட்ட நெருக்கடிகளுடன் நிராகரிக்கப்பட்டு வருவது கண்டிக்கத்தக்க விடயம் என்று தெரிவித்தனர்.
மேலும் இலங்கையில் அரச உத்தியோகத்தர்களுக்கு இரண்டாம் மொழியாக தமிழ் அரச உத்தியோகத்தர்கள் சிங்கள மொழியையும், சிங்கள அரச உத்தியோகத்தர்கள் தமிழ் மொழியையும் கற்று தேர்ச்சி அடைய வேண்டிய தேவைப்பாடு உள்ளது. அதற்காக அவர்களது சம்பளத்தில் சிறிய அதிகரிப்பும் வழங்கப்பட்டு வருகின்றது.
எனினும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் திருக்கோணமலை போன்ற மாவட்டங்களில் பணிபுரியும் பொலிஸாருக்கு "தமிழ் தெரியவில்லை" என்பதும், சிங்களத்தில் ஒரு தடை உத்தரவை கொண்டு வந்து, கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதும் கண்டிக்கத்தக்க விடயம் என்பதுடன், அடிப்படை உரிமையான இலங்கை அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழி உரிமை இங்கு மீறப்பட்டுள்ளது என்ற கண்டனத்தையும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்த போது, ஊடகவியலாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, தடை உத்தரவுகள் அரசாங்கத்தினால் பெறப்படுவது ஊடக சுதந்திரத்தை ஒதுக்குவதற்கு சமமான விடயம் என்பதை குறிப்பிட்டனர்.
மேலும் குறித்த இடத்தில் பல புலனாய்வுத் துறையினர் கூடியிருந்து நினைவேந்தலில் பங்கு கொள்பவர்களை கண்காணிப்பதும், அச்சுறுத்தல் வழங்கும்படி நடப்பதும் கண்டிக்கத்தக்க விடயம் என்றும் தெரிவித்தனர்.
மேலும் வடக்கு கிழக்கில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல நீதிமன்றங்களில் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை உத்தரவை பொலிஸா ர் கோரியிருந்த போதிலும் நீதிமன்றங்கள் தடை உத்தரவு வழங்க மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் "இன முறுகல் ஏற்படும்" என்ற வாதத்தை முன்வைத்து பொலிஸாரால் தமிழர்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், இனமுருகல் ஏற்படும் எனில் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் நடுநிலையாக இருந்து, இரு பக்கத்திலும் எடுக்க வேண்டிய நிலையில், ஒரு பக்கத்தின் உரிமைகளை மாத்திரம் தொடர்ச்சியாக கட்டுப்படுத்தி வருவது சரியானதா? என்ற கேள்வியை நீதித்துறை மற்றும் நிறைவேற்று துறைக்கு எதிராக எழுப்புகின்றனர்.



