உலகில் உள்ளவர்களுக்கெல்லாம் இங்கிலாந்து அகதிகள் முகாமாக இருக்க முடியாது!
இங்கிலாந்திற்கு வரும் அகதிகள் இணைந்துவாழாமல் இணையாக வாழ்கின்றனர் என அந்நாட்டின் உட்துறை செயலாளர் சுவெல்லா பிரேவர்மேன் (Suella Braverman) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள அமெரிக்கன் என்டர்பிரைஸ் எனப்படும் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” இங்கிலாந்தில் பன்முக கலாச்சாரம் தோல்வியடைந்து விட்டது. பன்முக கலாச்சாரம் என்பது தற்காலத்திற்கு ஒவ்வாத சித்தாந்தம்.
இந்த தவறான சித்தாந்தத்தால் இங்கிலாந்திற்குள் அகதிகளாக பலர் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகிறன. அவர்கள் குடியேறும் நாட்டு மக்களோடு இணைந்து வாழாமல் தங்கள் கலாச்சாரத்தையே பின்பற்றி தனியாக வாழ்கிறார்கள்.
ஒரு சில சமயம், நாட்டின் பாதுகாப்பிற்கும், சமூக அமைதிக்கும் கேடு விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். ஐரோப்பாவின் அனைத்து நகரங்களின் தெருக்களிலும் பன்முக கலாச்சாரம் தோல்வியடைந்ததற்கான அடையாளங்கள் தெரிகின்றன.
இதில் இங்கிலாந்தில் லெய்சஸ்டர் பகுதியில் கடந்த வருடம் நடந்த மோதல்களும் அடங்கும். ஒரு நாட்டின் கலாச்சாரத்தில் பெரும் வேகத்தில், பெரும் திரளாக வேறொரு கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் உள்ளே நுழையும் போது, அந்நாட்டில் ஏற்கெனவே இருந்த கலாச்சாரம் நீர்த்து போகிறது” இவ்வாறு சுவெல்லா தெரிவித்தார்.
இந்நிலையில் சுவெல்லா தெரித்த கருத்துக்கள் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு அந்நாட்டின் எதிர்கட்சியான லேபர் கட்சியும்,ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறு இருப்பினும் சுவெல்லா சார்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்தவர்கள் இதனை ஆதரித்து “உலகில் உள்ளவர்களுக்கெல்லாம் இங்கிலாந்து அகதிகள் முகாமாக இருக்க முடியாது” எனக் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.