கனடாவில் சிறிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசித்திரமான கொள்ளை

கனடாவின் ரொறன்ரோ பகுதியில் பெருமளவில் அழகுசாதன பொருட்களை களவாடிய கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுமார் 175000 டொலர்கள் பெறுமதியான பொருட்கள் இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆடைகள், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட பெருமளவு அழகு சாதனப் பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. நகரின் பல்வேறு சில்லறை விற்பனை நிலையங்களில் பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு பெண்களும் ஒரு ஆணும் இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட மூவரும் ஒன்றாரியோவின் மார்க்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றாரியோ மாகாணம் முழுவதிலும் இந்த நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 150000 டொலர் பெறுமதியான அழகுசாதனப் பொருட்களும், 25000 டொலர் பெறுமதியான ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பல கொள்ளைச் சம்பவங்களை இந்தக் கும்பல் மேலும் முன்னெடுத்திருக்கலாம் எனவும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அறிவிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



