வெற்றிகரமாக உள்ள பலாலி சர்வதேச விமான நிலைய செயற்பாடுகள்!

#SriLanka #Jaffna
PriyaRam
2 years ago
வெற்றிகரமாக உள்ள பலாலி சர்வதேச விமான நிலைய செயற்பாடுகள்!

சேவை வழங்கல் ஊடாக நாட்டு விமானத்துறை 2023 ஜனவரி முதல் ஓகஸ்ட் வரை 22 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அதில் சுமார் 10 பில்லியன் ரூபா திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு கூறினார்.

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 200 விமானப் போக்குவரத்து சேவைகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக விமான சேவைகள் பல சிரமங்களை எதிர்கொண்டிருந்தன. கோவிட் தொற்றுநோய் காரணமாக, விமானங்கள் நிறுத்தப்பட்டன. மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது. 

டொலர் நெருக்கடியால் முழு விமானப் போக்குவரத்துத் துறையும் பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. டொலர் நெருக்கடியால் விமானங்களுக்கு எரிபொருள் கிடைப்பது கூட கடினமாக இருந்தது. ஒரு விமானத்தை சென்னைக்கு அனுப்பி மற்றொரு விமானத்திற்கு எரிபொருளைக் கொண்டு வரும் நிலை காணப்பட்டது. 

ஆனால், பெற்றோலியத் துறை அமைச்சரும், நானும் தலையிட்டு, விமானங்களுக்கான எரிபொருள் இறக்குமதியை தனியாரிடம் கொடுத்ததன் மூலம், தட்டுப்பாடின்றி விமானங்களுக்கு எரிபொருள் கிடைக்கும் சூழல் உருவானது. 

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நவீன தொழில்நுட்பத்துடன் அபிவிருத்தி செய்ததன் காரணமாக, தென்கிழக்கு ஆசியாவின் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக சர்வதேச விமானப் போக்குவரத்து அதிகாரசபை பெயரிட்டுள்ளது. 

அதேநேரம், இலங்கைக்கு வரும் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்களின் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. 

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வாரத்திற்கு 28 விமான சேவைகளையும், சீனா ஈஸ்டன் ஏர் வாரத்திற்கு 05 விமான சேவைகளையும், எதிஹாடர் 06 விமான சேவைகளையும், கத்தார் ஏயார் 35 விமான சேவைகளையும், ஏர் அரேபியா 11 விமான சேவைகளையும், ஏர் இந்தியா 17 விமான சேவைகளையும், ஜசீரா ஏர் 04 விமான சேவைகளையும் முன்னெடுத்து வருகின்றன. 

மேலும் பல விமான நிறுவனங்கள் இலங்கை ஊடாக தமது சேவைகளை ஆரம்பிக்க இணங்கியுள்ளன. மேலும், பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் மிகவும் வெற்றிகரமாக தொடர்கின்றன. 

சென்னை மற்றும் பலாலி இடையே வாரத்திற்கு மூன்று சேவைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதோடு இதுவரை 200 விமான சேவைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பயணிகள் அற்ற வலயமாக இருந்த கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையம் தற்போது பரபரப்பான விமான நிலையமாக மாறி வருகிறது. 

பண்டாரநாயக்க விமான நிலையம் கடந்த ஓகஸ்ட் மாதம் 650,000க்கும் அதிகமான பயணிகளுக்கு சேவைகளை வழங்கியுள்ளது. விமான சேவைகளை வழங்குவதன் மூலம் இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 22 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்ட முடிந்துள்ளது. அதில் பத்து பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்கியுள்ளோம். 

மத்தள விமான நிலையத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன் செயல்பாட்டு இழப்புகளை குறைக்க ஏற்கனவே ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

அத்துடன், ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அந்த திட்டத்தை திறைசேரிக்கு அனுப்பிய பின்னர், உலக வங்கியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 

இதன்படி, ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கான வெளிப்படைத்தன்மையை உருவாக்க சர்வதேச ஆலோசகர் ஒருவரின் உதவியை நாட பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, புதிய ஆலோசகர் நியமிக்கப்பட்டு, ஸ்ரீலங்கன் விமான சேவையை விரைவாக மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

திட்டமிட்டபடி பணிகள் நடந்தால், அடுத்த ஆண்டு பெப்ரவரிக்குள் எதிர்பார்க்கும் பலன்களைப் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4