தமிழா நீயே உன் இனத்தை அழிப்பதா? விழித்துக்கொள் , இல்லையே நீயே மூழ்கிவிடுவாய்
காலத்தின் தேவை கருதி தமிழினம் மீண்டும் ஒருமுறை விழிக்கத் தவறும் பட்சத்தில் கனத்த நாட்களையே எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் - அதிகரித்துள்ள தற்கொலைகள் இதற்கு சான்றாகியுள்ளது.
தற்போது வடகிழக்கில் தினமும் மரண ஓலங்களே காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. யுத்த காலத்தில் விடிந்த பொழுதுகளுக்கு இணையான பொழுதுகளே இன்றும் தமிழர் பகுதிகளில் புலர்கின்றது என்பதை அழுத்தமாக அடையாளப்படுத்த விரும்புகிறேன்.
வட கிழக்கில் அதிகரித்துள்ள தற்கொலைகளைப் பற்றி ஆராய்ந்தால் அவை இளம் சமூகத்தையே இறுகபற்றிப் பிடித்துள்ளது. அதிலும் குறிப்பாக,கிளிநொச்சியில் அண்மைக் காலமாக பல இளம் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளமை எம் இனத்தின் மீதான சாபக்கேடாகவே பார்க்க வேண்டியுள்ளது.
தற்கொலை, வீதி விபத்து, போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் மரணங்கள் மற்றும் போலி முகவர்களினூடாக வெளிநாடு செல்வதால் ஏற்படும் உயிரிழப்பு என தமிழர் தரப்பில் அண்மைக்காலமாக மரணங்கள் மலிந்து போயுள்ளது. பிறப்பு வீதத்தையும் தாண்டிய இறப்பு வீதம் சடுதியாக தமிழர் தரப்பில் இடம்பெறுவதால், தமிழ் மக்களின் சனத்தொகையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் பற்றி சிந்திக்கவோ அல்லது ஆய்வு செய்வதற்கோ அல்லது அப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவோ தமிழ் கல்வியலார்கள் அல்லது போனால் தமிழ் தலைவர்களோ தலைப்படவில்லை என்பதே உண்மை. தன்னம்பிக்கை அல்லது தலைமைத்துவ பண்புகள் மற்றும் பிரச்சினைகள் எழும் போது அவற்றை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற மனோதிடம் இன்றைய இளம் சமூகத்தினரிடம் மருவிப் போயுள்ளதன் பாதிப்பையே இவ்வாறான சம்பவங்கள் எடுத்துக்காட்டுகிறது.
இனிவரும் நாட்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற பயப்பீதி அனைத்து பெற்றோர்கள் மத்தியிலும் இயல்பாகவே ஏற்பட்டுள்ளதை தற்போது காண முடிகிறது. பிள்ளைகளோடு பெற்றோர்கள் தமது அதிக நேரத்தை செலவழித்து மனம்விட்டு பேசுவதால் பிள்ளைகளின் உள்ளத்து உணர்வுகளை இலகுவில் புரிந்துகொள்ள முடியும்.
அத்தோடு பாடசாலை மட்டங்களில் வாரத்தில் ஒருமுறையேனும் பிள்ளைகளின் நலன்களில் கவனம் செலுத்தி அவர்களின் குறைகளே கேட்டறிந்து வழிகாட்டுவதனூடாகவும் பாரிய இழப்புக்களை தவிர்த்துக்கொள்ளலாம். தற்கொலைக்கு செய்வதற்கு பிரதான காரணமாக அமைவது மன அழுத்தம் ஆகும். இதிலிருந்து விடுபட பின்வரும் விடயங்களை கைக்கொள்ள வேண்டும்.
பிள்ளைகள் தமக்கு ஏற்படும் பிரச்சினைகளை தமக்கு நெருக்கமான நண்பர்கள் ஆசிரியர்கள் போன்றவர்களோடு பேசும் போது பல பிரச்சினைகளை தணித்துக்கொள்ள முடியும். புத்தங்களை வாசித்தல், செல்லப் பிராணிகளோடு தமது நேரத்தை செலவழித்தல், பொருத்தமான விளையாட்டுத்துறையை தெரிவு செய்தல், பொழுது போக்கு மையங்களில் தமது குறிப்பிட்ட நேரத்தை செலவழித்தல், ஆலய வழிபாடுகளில் ஈடுபடல், தியானம் செய்தல், யோகாசனத்தை தினமும் கடைப்பிடித்தல் மற்றும் இயற்கையை ரசித்தல் போன்றவைகளின் ஊடாக அதிகரித்துள்ள மன அழுத்தங்களிலிருந்து குறைந்தபட்சமேனும் விடுபட முடியும்.
தற்கொலை என்பது இயலாதவர்கள் கையில் எடுக்கும் முதல் ஆயுதமே. தற்கொலை செய்யுமளவிற்கு இருக்கின்ற மனோபலம் எதற்காக வாழ்வதற்கு இல்லாது போகின்றது என்பதே இங்குள்ள பாரிய பிரச்சினையாகும்.
நாட்டின் இன்றை பொருளாதார சுமைக்குள் ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளை வளர்ப்பதற்கு எடுக்கும் சிரத்தையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. தமது பிள்ளைகளின் எதிகாலத்தைப் பற்றியே சதா எண்ணிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் தமது குடும்ப பொருளாதாரம் பற்றிய உரையாடல்களை பிள்ளைகளோடும் பகிர்ந்து கொள்ளவேண்டும்.
தவறும் பட்சத்தில் பிள்ளைகளுக்கான பொறுப்பு என்பது இல்லாது போகின்றது. அவ்வாறான நிலையிலே எவற்றையும் சிந்திக்காது தற்கொலை என்ற விடயத்தை பிள்ளைகள் மேற்கொள்கிறார்கள். இதனால் பெற்றோர்களின் கனவும் பிள்ளைகளின் கனவும் கண் முன்னே தவிடு பொடியாகிறது.
தற்கொலை செய்வது அவமானம் என்பதையும், தற்கொலை சட்ட ரீதியான குற்றம் என்பதையும் பிள்ளைகளுக்கு உணர்த்த தவறாதீர்கள். தற்கொலை எந்த ஒரு விடயத்திற்கும் தீர்வாகாது என்பதை எமது சமூகம் உணராதவரை தற்கொலைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
தமிழர் பகுதியில் அதிகரித்துள்ள இளவயது மரணங்களை தடுக்க முயற்சிக்காதவரை இவ்வாறான மரணச் செய்திகள் தினமும் வெளிவருவதை எவராலும் தடுத்துவிட முடியாது. இச் சம்பவங்களை எல்லாம் கண்டும் காணாமல் கண்ணை மூடிக்கொண்டிருக்கும் தமிழ் தலைமைகள் இனியேனும் விழித்துகொள்ள வேண்டிய தேவையே வந்துள்ளது.
தமது வாக்கரசியலை நிலைப்படுத்துகின்ற வேலைத்திட்டத்தையே தமிழ் தலைமைகள் முன்னெடுக்கிறார்களே தவிர மக்கள் நலன் சார்ந்த விடயத்தில் இல்லை என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து கொள்ளவேண்டிய காலமே இதுவாகியுள்ளது.
காலத்தின் தேவை கருதி தமிழினம் மீண்டும் ஒருமுறை விழிக்கத் தவறும் பட்சத்தில் கனத்த நாட்களையே எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் என்பதே நிதர்சனம்.