கனடாவின் பிரதமரும், லிபரல் கட்சித் தலைவருமான ஜஸ்டின் துரூடோவின் பிறந்த தினம் இன்று
1971 டிசம்பர் 25ம் திகதி பிறந்த ஜஸ்டின் துரூடோ கனடிய அரசியல்வாதியும், லிபரல் கட்சித் தலைவரும் ஆவார். பியேர் துரூடோ மற்றும் மார்கரெட் சின்கிளையருக்கு மகனாக பிறந்த ஜஸ்டின் துரூடோ 2005ல் சோஃபி கிரேகோர் என்கிற பெண்ணை திருமணம் முடித்தார்.
2015 அக்டோபர் 19 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி பெரும் வெற்றி பெற்றதை அடுத்து இவர் கனடாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றார். இவர் முன்னாள் பிரதமர் பியேர் துரூடோவின் மூத்த மகன் ஆவார்.
2008 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் முதற் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2011, 2015 தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2013 ஏப்ரல் 14 இல் லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒட்டாவாவில் பிறந்த துரூடோ மக்கில் பல்கலைக்கழகத்தில் பயின்று 1994 இல் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் பிரிட்டீசு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1998 இல் கல்வியலில் பட்டம் பெற்றார்.
பட்டம் பெற்ற பின்னர் வான்கூவரில் ஆசிரியராகப் பணியாற்றினார். தந்தையின் இறப்புக்குப் பின்னர் அரசியலில் ஈடுபடலானார். 2008 தேர்தலில் பப்பினோ தொகுதியில் நின்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். 2009 ஆம் ஆண்டு முதல் லிபரல் கட்சியின் நிழல் அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.
2013 ஆம் ஆண்டில் லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் 36 இடங்களை மட்டும் கொண்டு மூன்றாம் இடத்தில் இருந்த லிபரல் கட்சியை 2015 தேர்தலில் 184 இடங்களுடன் முதல் இடத்துக்கு வெற்றி பெறச் செய்தார்.