கனேடிய பாதுகாப்பிற்காக தாம் அதிகளவு தொகையை செலவிடவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு
கனடாவின் பாதுகாப்பிற்கு தாம் அதிகளவில் செலவிடவுள்ளதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கூறியுள்ளார்.
போலந்திற்கான விஜயத்தின் போது பிரதமர் ட்ரூடோ இதனை அந்நாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு செலவுகள் தொடர்பில் போலந்து அரசாங்கத்தின் நிலைப்பாடு வரவேற்கப்பட வேண்டிய வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடிய இராணுவத்தின் ஆண் மற்றும் பெண் படையினருக்கும் தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது கனடிய அரசாங்கம் மொத்த தேசிய உற்பத்தியில் 1.3 வீதத்தை பாதுகாப்பிற்காக செலவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பாதுகாப்பு செலவு மொத்த தேசிய உற்பத்தியில் குறைந்தபட்சம் இரண்டு வீதமாக பேணப்பட வேண்டுமென நேட்டோ அமைப்பு கோரியுள்ளது. எனினும், இந்த இலக்கு இதுவரையில் கனடாவினால் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நேட்டோ படையினருக்கு தம்மால் இயன்ற ஒத்துழைப்பு முழுவதும் வழங்கப்படுமென போலந்தில் வைத்து கூறியுள்ளார்.