மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் விளக்கம்!
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் பூதாகாரமாக மாறியுள்ள நிலையில், சம்பள அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று (06.03) விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார். இதன்படி அலுவலக உதவியாளர் வகுப்பில் உள்ள முதல் தர ஊழியரின் மாத மொத்த சம்பளமானது 01 இலட்சத்து 45 ஆயிரத்து 773 ரூபாவாக காணப்பட்டதாகவும், தற்போது அந்த சம்பளமானது 01 இலட்சத்து 88 ஆயிரத்து 827 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த வகையின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புகளுக்கான சம்பளமும் அதிகரித்துள்ளதுடன், அவர்களின் மொத்த சம்பளம் 01 இலட்சத்து 64 ஆயிரத்து 634 ரூபாயில் இருந்து 02 இலட்சத்து 23 ஆயிரத்து 760 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது 59 ஆயிரத்து 129 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், முகாமைத்துவ உதவியாளர் வகுப்பின் 05 தரங்களுக்கு சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு அதிகாரியின் முந்தைய மாத மொத்த சம்பளம் 173,953 ஆகும். தற்போது 67 ஆயிரத்து 670 ரூபாய் அதிகரித்து 02 இலட்சத்து 40 ஆயிரத்து 623 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
முகாமைத்துவ உதவியாளர் வகுப்பில் தரம் ஐந்தாவது உத்தியோகத்தர் ஒருவருக்கான முந்தைய மொத்த மாதச் சம்பளம் 02 இலட்சத்து 72 ஆயிரத்து 809 ரூபாவாக காணப்பட்ட நிலையில் தற்போது 04 இலட்சத்து 21 ஆயிரத்து 184 ஆக அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இவர்களின் சம்பளமானது 01 இலட்சத்து 48 ஆயிரத்து 375 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
முதல் தர அதிகாரியின் முந்தைய மாத மொத்த சம்பளம் 03 இலட்சத்து 30 ஆயிரத்து 574 ஆக காணப்பட்ட நிலையில் தற்போது 01 இலட்சத்து 95 ஆயிரத்து 74 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.