சாந்தனின் இறப்பு சொல்லும் பாடம் என்ன?

#India #SriLanka #Death #Tamil Nadu
Mayoorikka
8 months ago
சாந்தனின் இறப்பு சொல்லும் பாடம் என்ன?

இலங்கை இந்திய கூட்டு சதியில் சாந்தன் எனப்படும் சுதேந்திரராஜா என்ற மாமனிதனை இன்று நாம் இழந்துள்ளோம். முன்னாள் இந்தியப் பிரதமரின் படுகொலைக்கு உதவியதற்காக டி சுதேந்திரராஜா எனப்படும் சாந்தன் மேலும் ஆறு பேருடன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

 இருப்பினும் 2022 நவம்பரில் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையான நிகழ்வுகளில் ஏழு நபர்களையும் சென்னைமேல் நீதிமன்றம் விடுவித்தது. அதில் முருகன் சாந்தன் மற்றும் ரொபேர்ட் பயஸ் ஜெயகுமார் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டினருக்கான தடுப்பு மையமான சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர், அங்கு அவர்கள் 2022 நவம்பர் முதல் அடைக்கப்பட்டனர். 

 இந்த நிலையில் சாந்தனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பின்னர் சென்னை ராஜீவகாந்தி அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

 உயிரிழந்த நிலையில் சாந்தனின் உடல் பெரும் பகிரதப் பிரயத்தனங்களுக்கு மத்தியில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

 உயிரோடு இலங்கைக்கு வருவார் என்று எண்ணி வழி மேல் விழி வைத்து 32 ஆண்டுகள் காத்திருந்த தாயாருக்கு கடைசியில் உயிரற்ற பிணமாக மகனை அனுப்பியிருந்தது தொப்புள் கொடி உறவான தாய்த் தமிழகம்.

 இந்த செயலின் மூலம் இந்தியா தனது பழியை தீர்த்துக் கொண்டுள்ளது. தனது நாட்டின் பிரதமரையே கொன்று விட்டு ஒருவர் எப்படி உயிரோடு திரும்பி தனது நாட்டிற்கு செல்வது என்ற வன்மத்தை இந்தியா இதன்மூலம் தீர்த்துக் கொண்டுள்ளது, அதற்கு தமிழ்நாடு அரசான திமுகவும் துணைபோயிருக்கின்றமைதான் ஈழத் தமிழர்கள் மத்தியில் பெரும் வேதனைக்குரியதாக அமைந்துள்ளது. 

ஏன் முள்ளிவாய்க்களில் லட்சக் கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்த திமுகவினர் சாந்தன் விடையத்தில் நடந்துகொண்டிருந்தமை ஆச்சரியப்படக்கூடியதல்ல. 

இது இவ்வாறு இருக்க இன்று சாந்தனை நாம் இழந்துவிட்டோம். எஞ்சிய மூவரையாவது காப்பாற்ற வேண்டும். அதற்கு என்ன வழி என்பதை நம் தமிழ் அரசியல்வாதிகள் தேட வேண்டும் அதை செயற்படுத்தி அவர்களை எவ்வாறு உயிரோடு மீட்பது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். 

அதைத்தான் சாந்தனின் வழக்கில் வழக்காடி சாந்தனின் உடலை ஊர் கொண்டு வந்து சேர்ப்பது மட்டும் தோளோடு தோள்நின்ற சட்டத்தரணி புகழேந்தி அவர்களும் இந்த வேண்டுகோளை அவரது இறுதி அஞ்சலியின் போது கோரிக்கைக்கையாக நமது தமிழ் அரசியல்வாதிகளிடம் விடுத்திருந்தார். அன்று அவரது உரையில் சில பகுதி, 

உயிரோடு தாயிடம் அனுப்பி வைப்போம் என்ற நம்பிக்கையுடன் இருந்த நிலையில் இன்று சாந்தனை நாம் இழந்துவிட்டோம். எஞ்சிய மூவரையாவது காப்பாற்றுவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும். 

 சாந்தனை எப்படியாவது காப்பாற்றி தாயிடம் அனுப்பி வைப்போம் என்றே நம்பியிலிருந்தோம். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த சாந்தனின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு நினைவிழந்த நிலைக்கு சென்றார். 

அந்த நிலையில் கூட எயார் அம்பியூலன்ஸ் மூலமாக கட்டுநாயக்கா ஊடாக அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். இருந்தும் அனைத்து போராட்டங்களும் பயனற்றுப்போகும் வகையில் அவர் உயிரிழந்தார். ஈழத்தில் இருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு உடனடியாக வரவேண்டும். 

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள எஞ்சிய மூவரும் எவ்வாறான கொடும் சிறையில் இருக்கின்றார்கள் என்பதை நேரடியாக பாருங்கள். தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து, எஞ்சிய மூவரும் விரும்பிய இடங்களுக்கு செல்வதற்கு உரிய அனுமதி கிடைக்கும் வரை அவர்களை தமிழ்நாட்டில் உள்ள உறவுகளிடம் கையளிக்குமாறு கோரிக்கை வையுங்கள். 

அது நடைபெற்றால் மட்டுமே அவர்களையாவது நாம் காப்பாற்ற முடியும். திருச்சி சிறப்பு முகாமில் உள்ள எஞ்சிய மூவரையும் காப்பாற்றி அவர்கள் விரும்பும் நாட்டிற்கு சென்று அவர்களுடைய குடும்பத்துடன் நிம்மதியாக வாழவைப்பதகான சட்டப்போராட்டத்தை தமிழ்நாடு திரும்பிய கையோடு முழுவீச்சோடு முன்னெடுக்க உள்ளேன் என தெரிவித்திருந்தார்.

 சட்டத்தரணி புகழேந்தி சிறையிலடைக்கப்பட்ட சாந்தன், முருகன் உள்ளிட்டோரின் வழக்கு விடயங்களை 2005 ஆம் ஆண்டு முதல் எவ்வித கட்டணங்களும் வாங்காது இலவசமாக முன்னெடுத்து வருகின்ற ஒரு தாய்த்தமிழ் உறவான சட்டத்தரணி.

 மேலும் சாந்தனின் இறுதி அஞ்சலியில் முருகன் பேசிய விடயங்களையும் இங்கு நோக்க வேண்டும் சாந்தனுடன் 33 வருடங்கள் நான் சிறையில் கழித்துள்ளேன். சாந்தன் தனது தாய் மண்ணில் கால் வைப்பதற்கு முன்னரே அவரது உயிர் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டுள்ளது. இதுவே எனக்கும் ராபர்ட் பயஸ்ஸுக்கும்,ஜெயகுமாருக்கும் நடக்கப் போகின்றது.

 எங்கள் போராட்டத்தை அழிக்க பல சக்திகள் முயன்றன. அதில் ஒன்று தான் ராஜீவ் காந்தி கொலை. அதில் நாங்கள் பலியாக்கப்பட்டவர்கள். எங்கள் ஊடாக எங்கள் மக்களுக்காக போராடியவர்களை நசுக்க பின்னப்பட்ட சதி வலைகள். போராட்டத்தை அழிக்க தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை வழங்க மக்கள் மத்தியில் பயத்தை விதைக்க குறியீடாக பயன்படுத்தப்பட்டவர்களே நாம்.

 சாந்தனின் உயிர் திட்டமிட்டு பறிக்கப்பட்டதே. சாந்தனுக்கு அநீதி இழைக்கப்பட்டதை மக்கள் வெளிப்படுத்தும் போதே , திரும்ப திரும்ப செய்ய மாட்டார்கள். நாதியற்றவர்கள் என்றால் , திரும்ப திரும்ப நசுக்கவே செய்வார்கள். சாந்தன் தாய் மண்ணில் கால் வைக்க முதல் உயிரை பறித்துள்ளார்கள். இதையே தான் எங்கள் மூவருக்கும் செய்ய போகிறார்கள்.

 33 வருடங்களாக சிறையில் மனதையும் , உடலையும் திடமாக வைத்திருந்த ஒருத்தர், சிறப்பு முகாமில் ஒரு வருடத்திற்கு எவ்வாறு இப்படி மாறி போனார். இதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. மக்களின் அஞ்சலி ஊடாக வெளி உலகுக்கு எமக்கு இழைக்கப்பட்ட அநீதி தெரிய வர வேண்டும் என அவரும் தெரிவித்திருந்தார்.

 இவர்கள் இருவரது உரைகளையும் நோக்கும்போது தெட்ட தெளிவாக விளங்குகின்றது சாந்தனின் உயிர் திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளது அத்தோடு இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதும் விளங்குகின்றது. சாந்தனைப் போலவே மீதி மூவரையும் இந்தியா அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்புமா என்ற கேள்வியும் உள்ளது. அதற்கு பதில் நம் தமிழ் அரசியல்வாதிகள் தான் கூறவேண்டும். 

அவர்கள் நினைத்தால் உடனடியாக தமிழகம் சென்று அழுத்தங்கள் கொடுத்து விடுவிக்கலாம். சாந்தனின் இறப்பு மூலம் ஈழத்தமிழர்கள் இந்தியா மீது வைத்திருந்த நம்பிக்கையை மழுங்கடிக்கச் செய்துள்ளது. 

 இனிமேலாவது ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளிற்கு விரோதமான செயல்களிற்கு முற்றுப்புள்ளி வைத்து, ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க இந்திய அரசாங்கம் செயற்பட வேண்டுகின்றோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!