நீரிழிவு நோய்: கண்டுபிடிப்பது எப்படி? காரணங்கள் அறிகுறிகள்

#Health #Medical #diabetes
Mayoorikka
3 months ago
நீரிழிவு நோய்: கண்டுபிடிப்பது எப்படி? காரணங்கள் அறிகுறிகள்

தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், நீரிழிவு நோய் தான்.

 ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை, ரத்தக் குழாய்களை சேதப் படுத்துவதால் "ஸ்ட்ரோக்' என அழைக்கப்படும் பக்கவாதம் முதல், பாதம் பாதிப்பு வரை எல்லா உறுப்புகளையும் சர்க்கரை ஒரு கை பார்த்துவிடுகிறது. கண்ணில் விழித்திரை பாதிக்கிறது. 

இதய ரத்தக்குழாய்களை பாதித்து மாரடைப்புக்கு வழி வகுக்கிறது. சிறுநீரக ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்கிறது. இதுதவிர, ஆண்மை குறைவு உள்ளிட்ட வெளியே சொல்ல முடியாத வேதனைகளையும் ஏற்படுத்துகிறது. 

நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம். பல்வேறு காரணங்களில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. உடல் சீராக இயங்குவதற்கு சர்க்கரை சத்து அவசியம்.

 நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை, ஆற்றலாக மாற்ற இன்சுலின் என்ற ஹார்மோன் தேவை. இந்த ஹார்மோனை கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சுரக்கின்றன. இன்சுலின் சுரப்பு இயல்பாக இருக்கும் வரை, உணவில் உள்ள சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்சனை இருக்காது. இன்சுலின் சுரப்பு குறைவாக இருந்தாலோ அல்லது இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டாலோ சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்சனை ஏற்படும். விளைவு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் வருகிறது.

 சர்க்கரை நோயை கண்டுபிடிப்பது எப்படி?

 துரதிஷ்டம் என்னவெனில், மற்ற நோய்களை போல் சர்க்கரை நோயை, அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது. வேறு ஏதோ பிரச்சனைக்காக டாக்டரிடம் சிகிச்சைக்கு வரும்போது தற்செயலாக, ரத்த பரிசோதனை செய்யும் நிலையில், தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது பலருக்கு தெரிய வருகிறது. சாப்பிடுவதற்கு முன், ரத்தத்தில் சர்க்கரை அளவு 60 முதல் 110 மி.கி., ஆக இருக்க வேண்டும். சாப்பிட்ட பின், சர்க்கரை அளவு 80 முதல் 140க்குள் இருக்க வேண்டும். 

இதை விட கூடினால் அது சர்க்கரை நோய் என அழைக்கப்படுகிறது. சாப்பிட்ட பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு 180 மி.கி., வரை இருந்தால், அவரை சர்க்கரை நோய் நெருங்கிக் கொண்டிருக்கிறது என அர்த்தம். கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற ரத்த வழி உறவினர்களில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம். பாரம்பரியத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் கூட, இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, மாறுபட்ட உணவுப் பழக்கம், உடல் உழைப்பு குறைவு போன்ற காரணங்களால், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என, ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தி உள்ளன.

images/content-image/2024/04/1713231960.jpg

 ரத்தக் குழாயை பாதிப்பது எப்படி?

 சர்க்கரையில் உள்ள ஒருவித ரசாயனம், ரத்தக் குழாய்களின் உள்புறத்தை அரித்து புண் ஏற்படுகிறது. இந்த புண் தானாக குணமடையும் நிலையில் தழும்புகள் ஏற்படுகின்றன. நாளடைவில், இந்த தழும்புகள் பெருகி, ரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துகின்றன.

 இரண்டு வகை

 சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும். சிறு வயதில் வருவது இது "ஜுவனையில் டயாபடிக்' என அழைக்கப்படுகிறது. இது முதல் வகை சர்க்கரை நோய். வைரஸ் கிருமியால், கணையம் பாதிக்கப்பட்டு இன்சுலின் முழுமையாக சுரக்காமல் போய்விடும். அல்லது இன்சுலினுக்கு எதிரான ஆன்டிபாடீஸ், உடலில் உருவாகி இன்சுலின் சுரப்பு அடியோடு நின்றுவிடும். 

இது 15 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளையே பாதிக்கிறது. இவர்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை சார்ந்திருக்க வேண்டும். முதல் வகை சர்க்கரை நோயாளிகள், 5 முதல் 7 சதவீதம் பேர் உள்ளனர். 

இரண்டாவது வகை சர்க்கரை நோய் என்பது 40 வயதுக்கு மேல் வருவது. குழந்தை பருவத்தில் இன்சுலின் சுரப்பு சரியாக இருக்கும். ஆனால், 35, 40 வயதை தாண்டும் நிலையில், இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்பட்டு சர்க்கரை நோய் வரும். இப்போது 30 வயதிலேயே இரண்டாவது வகை சர்க்கரை நோயாளிகளை சாதாரணமாக பார்க்க முடிகிறது.

 ரத்தப் பரிசோதனை மூலம் சர்க்கரை நோய் உறுதி செய்யப்பட்டுவிட்டால், டாக்டரின் ஆலோசனைக்கு ஏற்ப, மாத்திரையோ அல்லது இன்சுலின் ஊசியோ தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு சர்க்கரை நோயாளி எடுக்கும் மாத்திரைகளை நாம் எடுக்கக் கூடாது. 

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பொறுத்து எந்த மாத்திரை, எவ்வளவு அளவு என்பது தீர்மானிக்கப்படுவதால் டாக்டரின் பரிந்துரைபடியே மாத்திரை எடுக்க வேண்டும்.

 ஆரம்பகால அறிகுறிகள்:

 உயிரியல், வாழ்க்கை முறை, கலாச்சாரம், சமூக பொருளாதார நிலை, மரபியல், ஊட்டச்சத்து காரணிகள் மற்றும் பாலியல் ஹார்மோன்கள் ஆகியவற்றில் சிக்கல் இருந்தால் நீரிழிவு நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. 

ஆரம்ப கட்டத்தில் இதற்கான அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்வதால் பல பிரச்சனைகளை தடுக்கலாம்.

 பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களில் அறிகுறிகள் வித்தியாசமாகக் காணப்படலாம்.

 அறிகுறிகள்

 சர்க்கரை நோய்க்கென குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதும், தொடக்கத்தில் தெரியாது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி தாகம் ஏற்படும். அதிகமாக பசி ஏற்படுதல், உடல் சோர்வு, எடை மிக வேகமாகக் குறைதல், சிறுநீர் வெளியாகும் இடத்தில் அரிப்பு ஆகியவை சர்க்கரை நோயின் அறிகுறிகளாக கருதலாம். இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்வது அவசியம்.

 ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால் இதயம், சிறுநீரகம், கண்கள், கால்களில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு, பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

 உணவுக் கட்டுப்பாடு மாத்திரை எவ்வளவு முக்கியமோ அந்தளவு உணவு கட்டுப்பாடும் மிக முக்கியம். உணவு கட்டுப்பாடு என்றால் பத்தியம் இருக்க வேண்டும் என்ற அர்த்தம் அல்ல. தங்களது நோயின் தன்மை, வயது, எடை, இளம் பெண்களாக இருந்தால் கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவு முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். 

மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை, அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை சத்தை ரத்தத்தில் அதிகமாக்கும் உணவு வகைகளான சர்க்கரை, இனிப்பு கிழங்குகள், மா, பலா, வாழை, பேரிச்சை, திராட்சை, சப்போட்டா போன்ற பழ வகைகள், குளிர் பானங்கள், ஐஸ் கிரீம், சிப்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

 உணவு விஷயத்தில், கண்டிப்பாக டாக்டரின் அறிவுரையை பின்பற்ற வேண்டும். இனிப்பு சாப்பிட்டுவிட்டு கூடுதலாக ஒரு மாத்திரை போட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணம் தவறானது. எப்போதோ ஒரு பண்டிகை நாளில் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிட்டு, கூடுதலாக ஒரு மாத்திரை போடுவதில் தவறில்லை. 

ஆனால், அடிக்கடி அப்படி செய்வது நல்லதல்ல. தாழ் சர்க்கரை நிலை மாத்திரை அல்லது இன்சுலின் அளவு சற்று கூடிவிட்டால் சில நேரங்களில், ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பை விட குறைந்துவிடும். இதற்கு தாழ் சர்க்கரை நிலை என்று பெயர். 

தாழ் சர்க்கரை நிலை இருந்தால் நெஞ்சு படபடப்பு, பசி, "சில்' என வியர்த்தல், மயக்கம், பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். அவ்வாறு இருந்தால் உடனடியாக சாக்லேட், இனிப்பு மிட்டாய்கள், சர்க்கரை கலந்த தண்ணீர் சாப்பிட வேண்டும்.

 கால் பாதுகாப்பு

 சர்க்கரை நோயாளிகள் கால்களை பாதுகாப்பது மிக முக்கியம். சர்க்கரை நோயாளிகளுக்கு கால் நரம்புகள், ரத்தக்குழாய்கள் பாதிப்புக்குள்ளாகும். ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பால் ரத்தம் தடைபட்டு, கால்களில் உணர்வு குறையும். காயங்கள் ஏற்பட்டால் எளிதில் குணமாகாது.

 வலி தெரியாது என்பதால், காயத்தை நாம் பொருட்படுத்த மாட்டோம். நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடுவதால், புண் ஆறாமல் சீல் கோர்க்கும். ரத்த ஓட்டம் குறைவதால் கால்கள், விரல்கள் கறுத்து போய் அழுகிப் போவதால் விரலை அல்லது காலையே வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். எனவே, சர்க்கரை நோயாளிகள் கால் களில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்காக பிரத்யேக காலணிகள் உள்ளன. அதைப் பயன்படுத்தலாம்.