ரணிலை தோற்கடிக்கும் தமிழரின் ஆயுதம்!

#SriLanka #Election #Ranil wickremesinghe
Mayoorikka
1 month ago
ரணிலை தோற்கடிக்கும் தமிழரின் ஆயுதம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை சிந்திக்கவும் - சிங்கள அரசியல்வாதிகளை அச்சமடையவும் செய்திருக்கின்றது தமிழ் பொது வேட்பாளர் பற்றிய எண்ணக்கரு.

 தற்போதைய நிலையில், தமிழ் பொது வேட்பாளர் விடயத்துக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இல்லை. இருந்த போதிலும், இந்த விடயத்தை கையாளத் தமிழ்த் தலைமைகள் குறிப்பாக தமிழ்த் தேசியக் கட்சிகள் கூடிப் பேச ஆரம்பித்துள்ளன. 

இதையடுத்து, தமிழ் பொது வேட்பாளர் குறித்த விடயம் தற்போது சற்று பரவலடைந்திருக்கிறது அல்லது தமிழ் மக்கள் அது குறித்து சிந்திக்கத் தலைப்பட்டுள்ளனர். தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் இப்போதுதான் புதிதாக முளைத்த விடயமல்ல, 2009 போரின் பின்னர் நடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் முன்வைக்கப்பட்டதே. ஆனால், அப்போது தமிழ்த் தேசியக் கட்சிகள் பொது வேட்பாளர் விடயத்தைக் கையாள முயற்சிக்கவில்லை - அதனை அவர்கள் ஓர் அமில பரிசோதனையாகவே கருதினார்கள். 

கடந்த தேர்தலிலும் தமிழ் பொது வேட்பாளர் விடயம் குறித்து சற்று அதிகமாகவே பேசப்பட்டது. ஆனால், அது குறித்து தமிழ் அரசியல் கட்சிகளோ அல்லது தமிழ் மக்களோ சிந்திக்கத் தலைப்படவில்லை.

 இந்த நிலையில், இந்த ஆண்டு தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் விடயம் குறித்து அதிகம் பேசப்படுகின்றது - அலசப்படுகின்றது - தமிழ் அரசியல் கட்சிகள் இந்த விடயத்தை கையாள முயற்சிக்கின்றன - தமிழ் மக்கள் மத்தியிலும் இது குறித்து சிந்தனை தோற்றம் பெற்றுள்ளது. 

இந்த சிந்தனை வாதத்தைக் கடந்து 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கும் 2024இல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. இந்த இரு தேர்தல்களிலும் இப்போதைய நிலையில் வேட்பாளர்களில் ஒருவர் ரணில் விக்கிரமசிங்க என்பது. ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரை இனவாதமற்ற தலைவர் என்ற சிந்தனை தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. ஒரு காலத்தில் அவரின் ஐக்கிய தேசியக் கட்சி குறித்தும் அவ்வாறான சிந்தனை சற்று உள்ளது. 

தமிழ் மக்களின் அரசியலுக்கு தலைமை தாங்கும் கட்சி என்ற சிறப்புக்குரிய இலங்கை தமிழ் அரசு கட்சி கடந்த காலங்களில் அந்தக் கட்சியுடன் நட்பு பாராட்டியதும் அல்லது இணக்கமாக நடந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு போரையும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையையும் கட்டவிழ்த்து விட்டதில் ஐக்கிய தேசியக் கட்சி என்றுமே பின்னின்றதில்லை. 

அதிலும்விட, தமிழ் மக்களுக்கு எதிரான தென்னிலங்கை அரசியல் கலாசாரத்துக்கு பிள்ளையார் சுழி இட்டு ஆரம்பித்து வைத்ததே இந்தக் கட்சிதான். இதை காலதிகாலமாக தமிழ் மக்கள் உணர்ந்த போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் மீதான ஒரு வகை ஈர்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் இன்னும் முழுமையாக அழிந்து விடவில்லை. தவிர, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழர் விடயங்களில் தமிழ் மக்களை தங்கள் விரல்களை வைத்தே தங்கள் கண்களை குத்தவைத்தே வருகின்றார்.

 எப்போதும், நேரடியான தாக்கங்களை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தாமல் மறைமுகமான அல்லது தமிழ் மக்களை சூழ்ச்சிக்குள் சிக்கவைத்து காரியமாற்றுவதால் தமிழ் மக்கள் மத்தியில் ஏனைய சிங்கள தலைவர்களையும் விட ரணில் விக்கிரமசிங்க ஓரளவு வரவேற்பு உள்ளது. வடக்கு, கிழக்கில் இன்றளவும் நிகழும் காணி ஆக்கிரமிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள், இராணுவ நிலைத்திருப்பு மற்றும் பௌத்த மத ஆக்கிரமிப்பு என்பவற்றுக்கு தலையாயமானவர் ரணில் விக்கிரமசிங்கவே.

 இன்றளவும், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு, மயிலத்தமடு பிரச்னைக்கு தீர்வு, தமிழ் மக்களின் பிரச்னைக்கு தீர்வாக 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் என்று கூறினாலும் அவை எவற்றையும் அவர் நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக அவற்றை நடைமுறைப்படுத்தும் எண்ணமும் அவருக்கு இல்லை. சில அரசியல் கைதிகளை விடுதலை செய்தும் - காணிகளை விடுவித்தும் காட்டும் அவர் அவற்றைக் கொண்டு சில காரியங்களை ஆற்றிய பின்னர், சிக்கல்களை உருவாக்கி தனது கைகளை தானே கட்டிக்கொண்டு தமிழ் மக்களின் பலமான குரல்களை நசுக்கி விடுகிறார். விளைவு இந்தப் பிரச்னைகள் இன்றளவும் நீடித்தாலும் அவை குறித்து பலமான போராட்டங்கள் எழுவதில்லை.

 இது தவிர, தற்போதைய நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வலுவான தென்னிலங்கை தலைவர்கள் என்றால் அது ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திஸநாயக்க ஆகியோரே. இன்றைய நிலையில் தென்னிலங்கையில் வலுவான ஆதிக்கமுள்ள தலைவர்களாக இவ்விருவரும் உள்ள நிலையில், இவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும் சவால் மிக்கவர்களாக உள்ளனர். இதனால், பொது வேட்பாளர் என்ற பெயரில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுவிடும் கனவுடன் உள்ளார் ரணில் விக்கிரமசிங்க.

 மறுமுனையில், சஜித், அநுர ஆகியோர் ரணிலுக்கு சவாலான வேட்பாளர்களாக உள்ள போதிலும் மூவரும் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் எவருக்கும் 50வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைப்பது முடியாத காரியமாகிவிடும். எனவே, அதனை முறியடிப்பதற்கான மந்திராலோசனைகள் தென்னிலங்கையில் வலுவாகவே நடக்கின்றன. இந்த நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள தமிழ் பொது வேட்பாளர் குறித்த எண்ணக் கரு தென்னிலங்கை வேட்பாளர் கனவில் இருப்பவர்களை அச்சப்படுத்தியுள்ளது. 

இலங்கை சுதந்திரமடைந்த கடந்த 76 வருடங்களில் தமிழ் மக்களை ஏமாற்றி - பொய்யான வாக்குறுதிகளை அளித்து நன்மைகளை அடைந்த பின்னர் அல்லது அனுபவித்த அவர்கள், பின்னர் தமிழர்களை எட்டி உதைத்ததே வரலாறாக உள்ளது. இதற்கு பதிலடியாகவே தமிழ் பொது வேட்பாளர் விடயம் குறித்த எண்ணக்கரு உள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் மத்தியில் வலுவான கட்டமைப்பு இருந்த நிலையில் தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் மூலம் யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டது. ஆனால், 2024இல் அவ்வாறான நிலைமை இல்லை. 

தேர்தலை புறக்கணித்தும் பயனில்லை - அது சாத்தியமும் அற்றது. இதேநேரம், தென்னிலங்கையின் ஒரு வேட்பாளருக்கு வாக்களித்து மீண்டும் ஒருமுறை ஏமாற தமிழ் மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் ஏகோபித்த குரலை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்த தமிழ் பொது வேட்பாளர் விடயம் கையாளப்பட்டாலும். தமிழருக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தவல்ல - தமிழருக்கு இருப்பது பொருளாதார பிரச்னை மட்டுமே என்று கூறி வருபவருமான ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிப்பதற்கான ஆயுதமும் தமிழ் பொது வேட்பாளர் விடயமே.