பொது வேட்பாளரை பற்றி உரிய நேரத்தில் வௌிப்படுத்துவோம்! நாமல்

#SriLanka #Namal Rajapaksha
Mayoorikka
1 month ago
பொது வேட்பாளரை பற்றி உரிய நேரத்தில் வௌிப்படுத்துவோம்! நாமல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளரை முன்னிலைப்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தல் வந்தாலும் அதற்கு தயாராக இருக்கிறோம். இலங்கையில் எங்கு சென்று எமது முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் அழைக்கப்பட்டாலும் அனைத்து வேட்பாளர்களும் எமது கூட்டங்களில் இணைவதை நீங்கள் பார்க்கலாம். 

இதன் ஊடாக எமது கட்சி கிராமங்களிலும் தொடர்ந்து செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. ஜனாதிபதி, தேர்தலை வைப்பாரா? இல்லையா? என்பது எங்களுக்குத் தெரியாது. தேர்தல் ​வைத்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடும். அப்போது வாக்குச் சீட்டில் மொட்டு சின்னம் இருக்கும். வேட்பாளரை பற்றி உரிய நேரத்தில் வௌிப்படுத்துவோம். 

அதனை முன்கூட்டியே கூற வேண்டிய அவசியம் இல்லை. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஏனும் விண்ணப்பிக்க வேட்பாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்று நீங்கள் முன்பு என்னிடம் கேட்டீர்கள். தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுஜன பெரமுனவிடமிருந்து பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் மூலம், காலத்திற்கு ஏற்ற, சவால்களை சமாளிக்கக்கூடிய நபரை முன்வைப்போம்" என்றார்.

 இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுப்பதற்கு அரசாங்கம் எத்தகைய தந்திரங்களை கையாண்டாலும் அவை வெற்றியடையாது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் அபிவிருத்திக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் முறையான வேலைத்திட்டம் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.