விடுதலைப்போராட்டத்தில் இருந்தவன் என்பதற்காக எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது!

#SriLanka
Mayoorikka
1 week ago
விடுதலைப்போராட்டத்தில் இருந்தவன் என்பதற்காக எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது!

நான் விடுதலைப்போராட்டத்தில் இருந்தவன் என்பதற்காக எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது. எத்தனை விசாரணைகள் வந்தாலும் நான் எதிர்கொள்ளத்தயாராகவே இருக்கின்றேன் என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

 இது தேர்தல் ஆண்டு என்ற அடிப்படையில் எதிர்கட்சியினரும் வேறு சிலரும் ரணித்த அந்த ஜீவன்களை மையப்படுத்தி இன்னமும் விவாதப்பொருளாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் அரசியலுக்காக என் மீதும் கை நீட்டுவதனை இங்கு அவதானித்தேன். 

அவர்களைப்பற்றி என்னால் கவலை மட்டும்தான் அடைய முடியும். எத்தனை விசாரணைகள் வந்தாலும் நான் எதிர்கொள்ளத் தயராகவே இருக்கின்றேன். 2012 ஆம் ஆண்டிலிருந்தே இந்த மதப்பயங்கரவாத விடயம் மெல்ல மெல்ல வெளியே வரத்தொடங்கியது அதற்கு பௌத்த பேரினவாத சில சாதுக்களும் கடும் போக்காக பேசினார்கள்.

 அதையொட்டி முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமங்களில் ஆங்காங்கே சில விடயங்கள் நடக்கத்தொடங்கின. ஐ எஸ் ஐ எஸ் பயங்காரவாதம் உலகத்தில் உச்சம் தொட்டிருந்த நிலையில்தான் இங்கும் ஆட்சி மாற்றங்கள் நடந்தன .அப்போது ஆட்சியை பொறுப்பெடுத்தவர்கள் இதனை சரியாக கண்டு கொள்ளவில்லை.

 இங்கு சனல் 4 சம்பந்தமாக பொதுவாக பேசுவார்கள். இந்த நிறுவனம் இலங்கையில் யுத்தம் முடிந்த பின்னர் அறியப்பட்ட நிறுவனம்.இந்தக்குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட 8 பேரை வைத்து சத்தியப்பிரமாணம் செய்யும் சஹ்ரான் '' நான் இஸ்லாத்துக்காக மரணிக்கின்றேன்,அல்லாஹ்வின் கொள்கையை பின்பற்றி மரணிக்கின்றேன், எனது இரத்தம்,சதை எல்லாவற்றையும் நான் அதற்காக அர்ப்பணிக்கின்றேன், இது போராட்டத்துக்கான ஆரம்பம், எமது மதத்திற்கு எதிரான எல்லோரும் காபிர்கள், மாற்று மதங்களை சேர்ந்தவர்கள் கொல்லப்பட வேண்டும், அவுஸ்திரேலியாவில் தங்களைக்கொன்று விட்டு இலங்கை வரும் சுற்றுலா பயணிகளை எல்லாம் கொல்லுங்கள்,கண்ட இடத்தில் கொள்வதுதான் எனக்ளுக்கு அல்லாஹ் இட்ட கட்டளை ''என அழகாக வாக்குமூலம் அளித்திருந்தார். இவையெல்லாம் கடந்து சிறிய சிறிய துண்டு விடயங்களை பிடித்துக்கொண்டு இங்கு பேசுகின்றார்கள். சனல் 4 வில் காட்டுகின்றபோது அது ஒரு பிசுபிசுப்பான நாடகம். 

அந்த சனல் 4 தயாரிப்பாளரிடம் ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய . இதற்கு என்ன ஆதாரம் உள்ளது எனக் கேட்டார். அதற்கு அவர் எதுவும் இல்லை என்றார். ஆகவே இதில் எனது பெயரையும் இழுக்கின்றார்கள். சர்வதேச விசாரணைகளில் கூட எனது பெயர் கூறப்படவில்லை. 

 நான் சிறையில் இருந்ததன் அடிப்படையில் எனக்கு தெரிந்த தகவல்களை விசாரணை ஆணைக்குழுக்களுக்கு தெரிவித்தேன். நான் விடுதலைப்போராட்டத்தில் இருந்தவன் என்பதற்காக எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது. இங்கு உள்ள ஒரு பிஞ்சு பிள்ளை மக்களைக் குழப்புகிறது. எனவே மக்களை குழப்ப வேண்டாம் என சாணக்கியன் போன்ற சிறு பிள்ளைகளுக்கு கூற விரும்புகின்றேன் என்றார்.