உமா ஓயா அபிவிருத்தித் திட்டம் கையளிக்கப்பட்டதன் பின்னர் இந்தப் பிரச்சனையும் இல்லை!

#SriLanka
Mayoorikka
2 weeks ago
உமா ஓயா அபிவிருத்தித் திட்டம் கையளிக்கப்பட்டதன் பின்னர் இந்தப் பிரச்சனையும் இல்லை!

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டதன் பின்னர், அதனுடன் தொடர்புடையதாக மண்சரிவுகளோ வேறு பிரச்சினைக்குரிய நிகழ்வுகளோ இதுவரை பதிவாகவில்லை என மின்சக்தி இராஜாங்க அமைச்சர் அனுருத்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

 ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை நிறைவு செய்வதில் 09 வருடங்கள் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக நாட்டுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

இதன்படி, கடந்த 09 ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்பு 587 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஆரம்ப மதிப்பீடு 529 மில்லியன் டொலர்களாக பதிவு செய்யப்பட்டது. ஆனால், கடந்த 09 வருடங்களில் உமா ஓயா திட்டத்தின் ஊடாக மின்சார உற்பத்தி மேற்கொண்டு அதனை தேசிய கட்டமைப்பில் சேர்க்க முடியாமல் போனதால் இத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட தொகைக்கு நிகரான இழப்பை சந்திக்க வேண்டியிருந்தது. 

அத்துடன், உமா ஓயா திட்டத்தின் மூலம் மின்சார உற்பத்தியை தேசிய கட்டமைப்பில் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தினால் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறி மக்களை தவறாக வழிநடத்தும் ஊடக நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக தெரிகிறது.

 மழைக்கு பின் தோன்றும் சிறிய அருவிகளை காட்டி இந்த வளர்ச்சி திட்டத்தை சீர்குலைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்த திட்டத்துடன் தொடர்புடைய மண்சரிவு அல்லது வேறு எந்த சம்பவமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 எவ்வாறாயினும், உமா ஓயா பிரதேசத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் விரிசல்கள் மற்றும் நீர்க்கசிவுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக இன்று பூகற்பவியலாளர்கள் குழுவொன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அங்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அதற்கெல்லாம் தொழில்நுட்ப ரீதியிலான தீர்வுகள் உள்ளன என்பதை அரசாங்கம் என்ற வகையில் நாங்களும் பொறுப்புடன் கூறுகிறோம் என்றார்.