காலிஸ்தான் தலைவர் கொலை - கனடாவில் மூவர் கைது
காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ஒன்றின் தலைவரான ஹர்திப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜுன் மாதம் கனடா நாட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இந்த விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே நிஜ்ஜார் கொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருவதாக கனடா தெரிவித்தது.
இந்த நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் ஹிட் ஸ்குவாட் (தாக்குதல் குழு) உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கரன் ப்ரார், கரன்ப்ரீத் சிங், கமல்ப்ரீத் சிங் ஆகிய இந்தியர்கள் என்றும், சில மாதங்களுக்கு முன்பு சந்தேக நபர்களை புலனாய்வு அதிகாரிகள் அடையாளம் கண்டதாகவும், அவர்களை தீவிர கண்காணிப்பில் வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி டேவிட் டெபூல் கூறும்போது, நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்டு உள்ளனர்.
கொலை வழக்கைத் தவிர, இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகள் குறித்து தனி விசாரணைகள் நடந்து வருகிறது. கொலை வழக்கு மிகவும் தீவிர விசாரணையில் உள்ளது.