"விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் இணையற்ற செல்வம் தாய்" - உலக அன்னையர் தினம் இன்று!
இந்த உலகத்தில் சுயநலம் இல்லாத ஒரு ஜீவன் என்றால் அது அம்மாதான். பெற்றோருக்காக, கணவருக்காக, பிள்ளைகளுக்காக, இறுதியில் பேரப்பிள்ளைகளுக்காக என்று தனது வாழ்க்கையில் தன்னை தவிர்த்து மற்றவர்களுக்காகவே வாழ்ந்து செல்லும் ஓர் உண்ணதமான உள்ளம் தான் அம்மா.
அன்னையரை கொண்டாட ஒருநாள் போதாது. இருப்பினும் உலக வாழ் மக்கள் அனைவரும் ஒருநாளை நியமித்து அவர்களுக்கான கௌரவத்தை கொடுக்கும் விதமாக அன்னையர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில் இன்றைய தினம் (12.05) அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக அன்னையர் தினம் 1900 முற்பகுதியில் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. அன்னா ஜார்விஸ் என்ற பெண் தனது தாயின் நினைவாக இந்த நாளைக் கொண்டாடத் துவங்கினார்.
அன்னாவின் தயார் 1905 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.இதனைத் தொடர்ந்து அனைத்து தாய்மாரின் நினைவாக ஒருநாள் கொண்டாடப்பட வேண்டும் என்று அன்னா விரும்பினாள். இதன் அடிப்படையாக 1908 ஆம் ஆண்டு மே மாதம் மேற்கு வரிஜீனியாவில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
இவ்வாறாக இன்று ஏறக்குறைய 50 நாடுகளில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம் இன்று அனைத்து அன்னையர்களுக்கு ஓர் தினத்தை கொண்டுவந்துள்ளது.
இவையொருப்புறம் இருக்க அன்னையர் தினத்தில் மாத்திரம் நாம் நம் தாயை நினைவுக்கூறுவது சிறந்ததா என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். வெறுமனே ஒரு நாளில் வாழ்த்துக் கூறுவதினாலோ, அல்லது ஒரு நாள் மாத்திரம் அவர்களை நன்றாக பார்த்துக்கொள்வதிலோ அவர்கள் செய்த தியாகத்தை போற்றிட முடியாது.
தன் வாழ்நாளில் நமக்காக முக்கால் பகுதியை செலவழித்த தாய்மாருக்கு, நம் நம்வாழ்நாள் முழுவதும் கடமை பட்டுள்ளோம். தற்போதைய காலப்பகுதியில் எத்தனையோ தாய்மார் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் வேதனைகளை நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.