குடும்பத்துடன் கனடா செல்ல விசா வேண்டுமா?
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் கனடாவில் வசிக்கின்றனர்.
குடியுரிமை பெற்ற பிறகு தங்கள் பெற்றோரையும் கனடாவுக்கு அழைத்து வர பலர் விரும்புகின்றனர். ஆனால் 2020 இல் இருந்து `கனடா பெற்றோர் இடப்பெயர்வு விசா’ வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
கனடாவில் வசிக்கும் பிற நாட்டினர் தங்கள் பெற்றோரை அழைத்து வர விண்ணப்பிக்கும் விசா திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 2020 இல் இருந்து பரிசீலனையில் உள்ளன.
இது தொடர்பாக கனடா அரசாங்கம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, 2020 முதல் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியை கனடாவுக்கு அழைத்து வர ஸ்பான்சர் செய்யும் படிவங்களை சமர்ப்பித்த 35,700 ஸ்பான்சர் விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்படும் என்ற தகவலை பகிர்ந்துள்ளது.
இந்த அழைப்பு கடிதங்கள், மே 21, 2024 முதல் கனடாவின் குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை துறையால், `பெற்றோர் மற்றும் பெற்றோரின் பெற்றோர்’ (PGP) திட்டத்தின் கீழ் அனுப்பப்படும்.
எனவே, பிஜிபி (PGP) திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்கள் பெற்றோரின் விசாவுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் மின்னஞ்சல் வந்துள்ளதா என்பதை தொடர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம் மற்றும் பிஜிபி திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் சூப்பர் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கனடா அரசு தனது இணையதளத்தில், “அடுத்த 2 வாரங்களுக்குள் 35,700 அழைப்பு கடிதங்கள் அனுப்புவோம். 20,500 விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதே எங்கள் இலக்கு. ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
`பெற்றோர் மற்றும் பெற்றோரின் பெற்றோர்’ (PGP) திட்டம் என்றால் என்ன?
`பெற்றோர் மற்றும் பெற்றோரின் பெற்றோர்' (PGP) என்பது சிறப்பு திட்டமாகும், அதன் கீழ் கனடாவில் வசிக்கும் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் (PR) பிஜிபி விண்ணப்பத்தின் மூலம் தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு அழைத்து வர விண்ணப்பிக்கலாம்.
சூப்பர் விசா என்றால் என்ன? சூப்பர் விசா என்பது கனடாவின் குடிமக்கள் மற்றும் நிரந்தரமாக குடியேறியவர்கள் (PR) தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளை சந்திக்க விண்ணப்பிக்கும் ஒரு பிரத்யேக விசா திட்டம்.
அதன் கீழ், பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி கனடாவில் வசிக்கும் தங்கள் குழந்தைகளுடன் 5 ஆண்டுகள் வரை வசிக்க முடியும். கனடா சென்ற பிறகு, இந்த விசாவின் காலவரம்பை நீட்டிக்க முடியும்.
அவர்கள் கனடாவில் 10 ஆண்டுகள் வரை மீண்டும் மீண்டும் விண்ணப்பம் பதிவு செய்து வசிக்க முடியும்.
கனடாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் , சூப்பர் விசா திட்டத்தின் கீழ் செயல்பாடுகள் கொஞ்சம் தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா விசாவுக்கும் சூப்பர் விசாவுக்கும் என்ன வித்தியாசம்?
சூப்பர் விசா என்பது சுற்றுலா விசாவை (Visitor Visa) விட சற்று வித்தியாசமானது. சூப்பர் விசா குறிப்பாக பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளுக்கானது.
சூப்பர் விசாவின் கீழ், ஒரு விண்ணப்பதாரர் மொத்தம் 5 ஆண்டுகள் வரை தங்கலாம், அதே சமயம் சுற்றுலா விசாவின் கீழ், ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் 6 மாதங்கள் வரை தங்கலாம்.
சூப்பர் விசாவில் விண்ணப்பதாரரின் சொந்த பிள்ளைகள் (biological) அல்லது தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் மட்டுமே அழைக்க முடியும், ஆனால் சுற்றுலா விசாவில் இந்த கட்டுப்பாடுகள் இல்லை.
பொறுப்பேற்கும் படிவம்
பிஜிபி திட்டத்தின் கீழ் ஸ்பான்சராக ஆவதற்கு உறுதிமொழி படிவத்தில் (undertaking) கையெழுத்திட வேண்டும்.
கையெழுத்திடும் பட்சத்தில் இரண்டு விஷயங்களை ஒப்புக்கொள்வதாக கருதப்படும்.
1. குறிப்பிட்ட காலத்திற்கு, நீங்கள் ஸ்பான்சர் (நிதியுதவி) செய்பவர்களின் முழு செலவுகளையும் நீங்கள் ஏற்க வேண்டும்.
2. உங்களிடம் நிதியுதவி செய்பவர்கள், கனடா அரசாங்கத்தின் சமூக உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க கூடாது. அதே காலகட்டத்தில் அவர்கள் அரசாங்கத்திடம் இருந்து உதவி பெற்றால், அந்த செலவை நீங்களே ஏற்க வேண்டும்.
நீங்கள் ஸ்பான்சர் செய்யும் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்றவுடன், அவர்கள் தங்கியிருக்கும் காலத்தை உங்களால் குறைக்கவோ அல்லது உங்கள் ஸ்பான்சர்ஷிப்பை திரும்பப் பெறவோ முடியாது. அவர்கள் நிரந்தரக் குடியுரிமை பெறும் வரை மட்டுமே உங்கள் ஸ்பான்சர்ஷிப்பை நீங்கள் திரும்பப் பெற முடியும்.
'பெற்றோர் மற்றும் பெற்றோரின் பெற்றோர்’ விசா பெற என்ன தேவை?
நீங்கள் குறைந்தது 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
கனடாவில் வசிக்க வேண்டும்.
நீங்கள் ஒரு கனடிய குடிமகன் அல்லது கனடாவில் நிரந்தரமாக வசிப்பவர் அல்லது கனேடிய-இந்தியச் சட்டத்தின் கீழ் கனடாவில் இந்தியராகப் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.
நீங்கள் அழைக்கும் பெற்றோரை பார்த்து கொள்ள உங்களிடம் போதுமான நிதி உங்களிடம் இருக்க வேண்டும்.
இதற்கு நீங்கள் வருமானச் சான்றிதழை வழங்க வேண்டும் மற்றும் உங்களுக்கு இணையர் இருந்தால், நீங்கள் இருவரும் சேர்ந்து விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டும்.
குடியேற்றம் மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குடியேற்றம் மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளின் அனைத்துத் தேவைகளையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.