நினைவுகளே பேராயுதம்! நினைவேந்தலின் அர்த்தங்களும் வழிவகைகளும்!
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுறுத்தப்பட்ட ஒரு சகாப்தம் ஈழத்தமிழர்கள் வாழ்வில் மிக முக்கியமானதொன்று. ‘சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே’ என்ற கனவோடு பயணித்த ஒரு மக்கட் கூட்டத்தின் கனவுகள் சிதைத்தொழிக்கப்பட்ட காலம் அது.
ஈவிரக்கமற்று மனித உயிர்கள் கொன்றொழிக்கப்பட்ட காலம் அது. விரக்திக்கும் நம்பிக்கையீனத்திற்கும், சீரழிவிற்குமான விதைகள் விதைக்கப்பட்ட காலமும் அது தான். உலகத்தினதும், உள்நாட்டினதும் ஆதிக்க சக்திகள் அடக்குமுறைகளுக்கொதிராகக் கலகம் செய்து புதியதோர் உலகத்தைக் கனவு கண்ட ஒரு மக்கட் கூட்டத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி ஒழித்த கொலையுதிர் காலமும் அதுவே.
எனினும் அதே காலத்திலிருந்து தான் ஈழத்தமிழர்கள் தமது ஆத்ம வீரியத்தை மீண்டும் பெறவேண்டும். அதே காலத்திலிருந்துதான் புத்துயிர்ப்புக்கான எமது பயணத்தை மீண்டும் தொடங்க வேண்டும். அதே காலத்திலிருந்துதான் எமக்கான படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டு பூரணத்துவமும் புதிய பொலிவும் உள்ள புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.
அந்த நாட்களை நினைவுகூர்தல், நினைவெழுச்சி கொள்ளுதல், கற்றுக் கொள்ளுதல், புதிய பாதைகளையும், பயணத்தையும் தெளிந்து கொள்ளுதல் என்பவற்றிற்காக ஒவ்வொரு வருடமும் இக்காலப் பகுதியை ஈழத்தமிழினம் பயன்படுத்த வேண்டும். எங்கே விழுத்தப்பட்டோமோ அதனையே மீளெழுவதற்கான விசைப்பலகையாக மாற்றுதல் வேண்டும். 2024ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காற் பெரும் துயரத்தின் பதினைந்தாவது வருடம்.
முள்ளிவாய்க்காற் பேரவல நினைவேந்தலுக்கான ஆழமான அரசியற் காரணங்கள் எவை என்பது குறித்தும், இவ் வருடத்திலிருந்து, ஒவ்வொரு வருடமும் மே 1 ஆம் திகதி தொடக்கம் மே 18 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் ஈழத் தமிழ் மக்கள் செய்யக் கூடிய, செய்ய வேண்டிய பன்முக நடவடிக்கைகள் தொடர்பாகவும் சில கருத்துகளையும், முன்மொழிவுகளையும் தமிழ் சிவில் சமூக அமையம் முன்வைக்கின்றது. நினைவேந்தல் ஏன்? எந்தவொரு மக்கட் கூட்டமும், உயிர்வாழ்தல் (Survival), நல்லிருப்பு (Wellbeing), அடையாளம் (Identity), சுதந்திரம் (Freedom) என்பவை உறுதிப்படுத்தப்பட்ட வாழ்வினையே விரும்பும், அவற்றிற்காகத் தொழிற்படும். இவ்வாறான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கு மக்களால் ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடுகளே, பொருளாதார முறைமைகளும், அரசு எனும் அமைப்புமாகும்.
பொருளாதாரமும், அரசும் இன்றிருக்கும் வடிவத்திலேயே ஆரம்பத்தில் தோன்றியிருக்கவில்லை. பன்னெடுங்காலமாகப் பரிணமித்தே அவை இன்றிருக்கும் நிலையை அடைந்தன. இப் பரிணாம வளர்ச்சியின் விளைவாக, பொருளாதார முறைமையிடம் மட்டற்ற செல்வமும், அரசிடம் கட்டற்ற அதிகாரங்களும் குவிக்கப்பட்டன. இந்த முறைமைகளில் முக்கிய வகிபாகம் வகிப்போர் செல்வத்தினையும் அதிகாரங்களையும் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் உயிர்வாழ்தல் (Survival), நல்லிருப்பு (Wellbeing), அடையாளம் (Identity), சுதந்திரம் (Freedom) என்பவற்றை உச்சப்படுத்தும் அதேவேளையில், அக் குறிப்பிட்ட தரப்புகளுக்கு வெளியேயான பெருந்திரளான திரளான மக்கட் கூட்டத்தினரின் நலன்களைப் பாதிப்புறச் செய்வது இயல்பானதாகி விட்டது. இதற்கு மாற்றாக பெருந்திரளான திரளான மக்கட் கூட்டத்தினரின் நலன்களைப் பாதுகாப்பது மானிட வரலாற்றின் தீர்க்க முடியாச் சவாலாக நீண்டு வருகிறது.
முன்பிருந்த காலங்களைப் போல அல்லாமல், இன்றைய யுகத்திலே, நேரடியான அடக்குமுறை சார்ந்ததாக மட்டும், பொருளாதார-அரசியல் அதிகாரக் கூட்டு செயற்படுவதில்லை. மிகவும் சூட்சுமமான முறைகளினூடாகப், பாதிக்கப்படும் பெரு மக்கட் கூட்டத்தினரின் சம்மதத்தையும் அவர்கள் உற்பத்தி செய்கிறார்கள். ‘கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்’ என்ற நிலையையும் மீறி ‘கஞ்சி குடிப்பதற்கிலாராக’ இருப்பது தவிர்க்க முடியாதது என்பதான நம்பிக்கையையும், நோக்கு நிலையையும் இந்தப் பொருளாதார-அரசியல் அதிகாரக் கூட்டு மக்கள் மனங்களில் வெற்றிகரமாகக் கட்டமைத்து விடுகிறது. இதற்காக அக்கூட்டு பெருங் கதையாடல்களைக் (Grand Narratives) கட்டமைக்கிறது.
ஏதாவது ஒன்று குறித்தான பயப்பீதியை அல்லது பிரமிப்பை இக் கதையாடல்களூடாக இக் கூட்டு கட்டமைக்கிறது. அதன் பின்னர், அப்பிரமிப்புகளின் காவலர்களாக, அல்லது பயப்பீதியை ஒழிக்கும் வீரர்களாகத் தம்மை உருவகப்படுத்தித், தமது அனைத்துச் செயற்பாடுகளுக்குமான சம்மதத்தை மக்கள் மத்தியில் உருவாகுகின்றனர்.
அடுத்ததாக உலகில் என்ன விடயங்கள் நடைபெறுகின்றன? ஏன் அவை நடைபெறுகின்றன? என்பவற்றை மக்கள் திரளினர் புரிந்து கொள்ள முடியாதவாறு, ‘அறிதலின் மீதான யுத்தம்’ (War on Sense Making) ஒன்றையும் இவ்வதிகாரக் கூட்டு மேற்கொள்கிறது. ஒரே சமயத்தில் பல்வேறு விடயங்களைப் பேசு பொருள்களாக்குவது, ஒழுங்குபடுத்தப் படாத உரையாடல்களை ஊக்குவிப்பது, சம்பவங்களை முதன்மைப்படுத்துவது, பரபரப்பை ஏற்படுத்துவது, காரண காரியங்கள் தொடர்பில், இருட்டடிப்பை மேற்கொள்வது, கல்வி, கலை, பண்பாடு, வெகுசனத் தொடர்பு மற்றும் சமூக ஊடகங்களில், ஆழமான உள்ளடக்கங்களுக்குப் பதிலாக, வெகுசனக் கவர்ச்சி மிக்க, மிகக் குறுகிய, ஆழமற்ற உள்ளடக்கங்களை ஊக்குவிப்பது என்பவற்றினூடாக, முழுமையான அறிதலையும், அதனூடான தீர்மானமெடுத்தலையும், சாத்தியமற்றதாக்கும் ‘அறிதலின் மீதான யுத்தத்தை (War on Sense Making) இவ்வதிகாரக் கூட்டு இடையறாது மேற்கொள்கிறது.
இறுதியாக அர்த்தம் காணலின் மீதான யுத்தத்தையும் (War on Meaning Making), இவ்வதிகாரக் கூட்டு இடையறாது மேற்கொள்கிறது. மிகைப் பொருளாதார வளர்ச்சியா? சமத்துவமான பகிர்வா? பொருள் சார் வாழ்க்கை மேம்பாடா? இயற்கையின் பேணுகையா? இனப் பெருமிதமா? பல்லினத் தன்மையா? என்பது போன்ற தர்க்க ரீதியில் விடைகாணப்பட முடியாத, அற விழுமியங்களின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய விடயங்களில், இவ்வதிகாரக் கூட்டுக்கு எது உகந்ததோ அதனை உயர்த்தி, மற்றையவற்றை மலினப் படுத்தும் அர்த்தம் காணலின் மீதான யுத்தத்தையும் (War on Meaning Making) இத் தரப்பு இடையறாது மேற்கொள்கிறது.
இம் மூன்று மூலோபயங்களில் எவற்றில் ஒன்றிலாவது தோல்வியடைந்து விடுவோம் என இக் கூட்டு அச்சமடையும் போது, வெளிப்படையான அடக்குமுறை, வன்முறை என்பவற்றைக் கையிலெடுக்கப் பின்னிற்பதில்லை. ‘முள்ளிவாய்க்காற் பேரவலம்’ பெரும் மக்கட் கூட்டத்தினருக்கும், ஒரு தரப்பு நலன் சார்ந்த அதிகாரக் கூட்டுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளின் உலகளாவிய கதையின் உள்நாட்டு வெளிப்பாடுதான். சிங்களப் பெரு வணிகப் பொருளாதாரத் தரப்பும், சிங்களப் பெருங் குடும்ப அரசியற் தரப்பும், தமது கூட்டு நலன்களுக்காக ஒட்டு மொத்தமான மக்கட் கூட்டத்தினருக்குப் பாதகமாக மேற்கொண்ட பெருந்திட்டத்தின் வெளிப்பாடுதான் முள்ளிவாய்க்காற் பேரவலம்.
“பயங்கரவாதம்” என்ற பெருங்கதையாடல் ஊடாகவும், “வந்தேறு குடிகள்” எதிர் “மண்ணின் மைந்தர்கள்”, ஏனையவர்களால் ஏற்படக் கூடிய வளப்பறிப்பு, வாய்ப்புப் பறிப்பு என்பவை தொடர்பான பெருந்தேசியத்தின் அச்சம், இந்திய விஸ்தரிப்புவாதம், மேற்குலக மேலாதிக்கம், பிரிவினைவாதம், என்பவற்றை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப் பட்ட சிங்கள மக்களின் மீதான ‘அறிதலின் மீதான யுத்தம்’ (War on Sense Making), “இனப் பெருமிதம்” என்ற போர்வையில் ஒளித்த பௌத்த சிங்களப் பேரினவாதம் எதிர் பல்லினத்துவம் என்பவை தொடர்பான அர்த்தம் காணலின் மீதான யுத்தத்தையும் (War on Meaning Making) பயன்படுத்தி, தமக்கெதிராகப் போராடியவர்களை மட்டுமல்லாது, அவர்கள் சார்ந்த மக்கட் கூட்டத்தையும் துடைத்தழித்த கதை தான் முள்ளிவாய்க்காற் பேரவலம்.
பொருளாதார- அரசியல் கூட்டின் கட்டற்ற வலுவை, அரசியல் ஏற்பாடுகளூடாக மட்டுப்படுத்தல், அதிகாரக் கூட்டின் பெருங்கதையாடல்களை அம்பலப்படுத்தி மக்கட் கூட்டத்தினரின் கதைகளை, மாற்றுக் கதையாடல்களை உறுதிப்படுத்தல், மக்களின் அறிகை மற்றும் அர்த்தப்படுத்தலுக்கான இயல் தகைமைகளை உச்சப்படுத்தல், அதிகாரக் கூட்டினருக்கு எதிராக அவர்களின் எதிர்வினை புரியும் திறனை உறுதிப்படுத்தல் என்பவற்றிற்கூடாக மட்டுமே இவ்வாறான பேரவலங்கள் மானிடர் மத்தியில் மீள நிகாழமையை உறுதிப் படுத்தலாம். முள்ளிவாய்க்காற் பேரவலத்தை நினைவு கூர்தல் என்பது, நடந்தவற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கும், மீள நிகழாமை நோக்கிய தேடலைத் தொடர்வதற்கும், அதிகாரக் கூட்டினை வலுவிழக்கச் செய்து, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் அறத்தின் அடிப்படையில் வாழ்வினைக் கட்டியெழுப்பும் நீண்ட பயணத்தின் முதல் அடியெடுப்பாகும்.
பொருளாதார-அரசியல் அதிகாரக் கூட்டிற்கு எதிராக ‘அரகலய’ நிகழ்த்தப்பட்ட போது, இதே மூலோபாயங்களைப் பயன்படுத்தி, சிங்களப் பெரு வணிக- பெருங் குடும்ப அதிகாரத்தின் மற்றுமொரு மையத்திற்கு அதிகாரத்தைக் கை மாற்றி, அடிப்படையை மாற்றாத வரலாறும், முள்ளிவாய்க்காற் பேரவலம் அனைவராலும் நினைவு கூரப்படுவதற்கான அவசியத்தை வலியுறுத்தி நிற்கிறது. நினைவேந்தலை எவ்வாறு மேற்கொள்ளலாம்? பிடியரிசி சேகரிப்பும், சமூகமாய் ஒன்று திரண்டு முள்ளிவாய்க்காற் கஞ்சி காய்ச்சி அருந்துதலும் கிராமங்கள் தோறும் உள்ளுர் அமைப்புகள் வீடு வீடாகப் பிடியரிசி சேகரித்து, பின்னர் அதனைத் தமக்குப் பொருத்தமான ஓரு நாளில் ஒன்றாய் இணைந்து கஞ்சி ஆக்கி அருந்துதல். அந்த நாட்களை மீளவும் மனதிருத்தி இழக்கப்பட்ட உயிர்களை அஞ்சலித்தல்.
இசை ஆராதனைகளும், கவிதா நிகழ்வுகளும் இக்காலப் பகுதியின் நினைவுகள் நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட வாழ்க்கை, இழக்கப்பட்ட உயிர்கள் எதிர்காலக் கனவுகள் என்பவற்றை மையப்படுத்திய பாடல்களையும், கவிதைகளையும் இயற்றியும், இசையமைத்தும் இசை ஆராதனைகளையும், கவிதா நிகழ்வுகளையும் பொருத்தமான இடங்களில் நடாத்துதல். ஓவிய, திரைப்பட, சிற்ப கண்காட்சிகள் இக்காலப்பகுதிக்கான கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட காண்பியங்களைக் காட்சிப்படுத்தி உரையாடல்களை மேற்கொள்ளல்.
ஓளிப்படக் கண்காட்சி ஓழுங்கமைப்புகளும், நிகழ்வுகளும் முள்ளிவாய்க்காற் பேரவலம், அதன் பின்னரான அனுபவங்கள், எதிர்காலச் செல்நெறி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படங்கள், குறுந்திரைப்படங்கள், திரைப்படங்கள், காணொளிகள் என்பவற்றைக்; காட்சிப்படுத்தி உரையாடல்களை மேற்கொள்ளுதல். நிகழ்கலை அரங்காற்றுகை நிகழ்வுகள் இக்காலப்பகுதிக்கான கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட நடன நிகழ்வுகள், நாட்டிய நிகழ்வுகள், நாட்டிய நாடகங்கள், தெருவெளி அரங்கு என்பவற்றைப் பல்வேறு பிரதேசங்களில் ஆற்றுகை செய்து உரையாடல்களை மேற்கொள்ளுதல். ஆய்வுக் கருத்தரங்குகளும் உரையாடல்களும் ஈழத் தமிழினத்திற்கு நடந்தவை எவை? எமக்கும், எம் மத்தியிலும் நடந்துகொண்டிருப்பவை எவை? ஏன் இவ்வாறு நடைபெறுகின்றது? நாம் என்ன செய்ய வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்? என்பவை தொடர்பாக எமது இருப்பைப் பாதிக்கும் பரப்புகள் அனைத்தையும் சார்ந்து பல்வேறுபட்ட ஆய்வுக் கருத்தரங்குகளையும், உரையாடல்களையும் தமிழ்ப் பிரதேசம் எங்கணும் நடத்துதல்.
சமூக வலைத்தள ஊடகச் செயற்பாடுகள் மேலே குறிப்பிட்ட 1-6 வரையான நடவடிக்கைகள் அனைத்தையும் சமூக வலைத்தளங்கள் மற்றும் அச்சு, ஒலி, ஒளி ஊடகங்கள் ஊடாக வெளிக்கொணர்ந்து பகிர்தல். அதற்கு மேலாக சமூக வலைத்தளங்களிலே இக்காலப்பகுதிக்காக Profile, Banner, #Hashtag என்பவற்றை தாயகத்திலும், புலத்திலும் உள்ள அனைவரும் கைக்கொள்ளல். மனிதாயத, சூழலியற் செயற்பாடுகள் பல்வேறு புதிய புதிய வழிமுறைகளுக்கூடாக நினைவேந்தலையும், அஞ்சலிகளையும் மேற்கொள்ளுதல்.
உதாரணமாக குருதிக் கொடை நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், சிரமதானம் மேற்கொள்ளுதல், மரங்கள் நடுதல், பொது இடங்களில் மாசுப் பொருட்களை அகற்றல் என்பவற்றை நினைவேந்தல் நடவடிக்கைகளாக மேற்கொள்ளல். நினைவேந்தலும் அஞ்சலித்தலும் வர்த்தக நிலையங்கள், பொது இடங்கள், வீடுகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் ஒளியேற்றி அஞ்சலித்தல் ; வாகனங்களைக் குறித்த நேரத்தில் நிறுத்தி இரு நிமிட அஞ்சலியை மேற்கொள்ளல். (இது முள்ளி வாய்க்கால் முற்றத்தில் சுடரேற்றும் நேரமாக அமையலாம்) முள்ளிவாய்க்கால் முற்ற நினைவேந்தலிலும், கிழக்கில் இதற்கு சமாந்தரமாக நடத்தப்படும் நினைவேந்தலிலும் நேரடியாகப் பெருவாரியாகப் பங்கெடுத்தல்.
‘நினைவுகளே பேராயுதம்’
தமிழ் சிவில் சமூக அமையம்