IPL - ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த கொல்கத்தா
10 அணிகள் கலந்து கொண்ட 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் கடந்த 19-ம் தேதியுடன் நிறைவடைந்தன. இந்நிலையில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா அகியோர் களம் இறங்கினர்.
இதையடுத்து இம்பேக்ட் வீரராக களம் புகுந்த சன்வீர் சிங் டக் அவுட் ஆனார். இதையடுத்து அப்துல் சமத் உடன் கேப்டன் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். இதில் கம்மின்ஸ் ஓரளவு ரன்கள் சேர்த்து அணியின் ரன்ரேட்டை உயர்த்தினார்.
இறுதியில் ஐதராபாத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் எடுத்தது.
ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 55 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் சார்பில் குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் களமிறங்கினர். அடுத்ததாக வெங்கடேஷ் அய்யருடன், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. இதனிடையே ஐதராபாத் அணி வீரர்கள் முக்கியமான கேட்ச்களை தவற விட்டனர். தொடர்ந்து அதிரடி காட்டி வந்த வெங்கடேஷ் அய்யர், 28 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
மறுமுனையில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர், தனது அரைசதத்தை பதிவு செய்ததுடன் சிக்சருடன் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதன்மூலம் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றதுடன் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.