எலுமிச்சையை ஒருசில உணவுகளுடன் சேர்க்கக்கூடாது! எந்தெந்த உணவுகள் தெரியுமா?
நாம் அதிகம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் எலுமிச்சையும் ஒன்று. இது நம் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகளை வழங்கி, தலைமுடி, சருமம் போன்றவற்றை பராமரிக்க உதவுகிறது. ஆனால், ‘எலுமிச்சையை ஒருசில உணவுகளுடன் சேர்க்கக்கூடாது’ என பரிந்துரை செய்யப்படுகிறது.
காரணம், அவற்றால் உணவு சுவையின் மாற்றம், செரிமானப் பிரச்னைகள் போன்றவை ஏற்படலாம். எனவே, இந்தப் பதிவில் எந்தெந்த உணவுகளில் எலுமிச்சை சேர்க்கக்கூடாது என்பதைப் பார்க்கலாம்.
காரமான உணவுகள்: இயற்கையிலேயே எலுமிச்சை அமிலத்தன்மை நிறைந்தது. இதை காரமான உணவுகளில் சேர்க்கும்போது அதன் காரத்தன்மையை மேலும் அதிகரித்துவிடும். எனவே, காரமான உணவுகளில் எலுமிச்சை சேர்ப்பதைத் தவிர்க்கவும்.
இதனால் உணவின் சுவை முற்றிலுமாக மாறிவிட வாய்ப்புள்ளது.
கடல் உணவுகள்: பெரும்பாலான கடல் உணவுகளுடன் எலுமிச்சை சேர்த்து சாப்பிடுவது வழக்கமாக இருந்தாலும், இது ஒரு நல்ல காம்பினேஷன் அல்ல. குறிப்பாக, மீன் வகைகளுடன் எலுமிச்சையை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், எலுமிச்சை சேர்ப்பதால் மீனின் சுவை முற்றிலும் மாறி, சிட்ரஸ் சுவையை அதற்கு கொடுத்து விடுகிறதாம்.
இனிப்பு அதிகமான பழங்கள்: எலுமிச்சை புளிப்பானது என்றாலும், அதில் ஒரு கசப்பு சுவையும் உள்ளது. இவற்றை இனிப்பு மிக்க பழங்களுடன் சேர்க்கும்போது அதன் சுவை கசப்பாக மாற வாய்ப்புள்ளது. இதனால் பழத்தின் இயற்கையான இனிப்பு மறைக்கப்படுகிறது. ஒருவேளை நீங்கள் பழங்களுடன் எலுமிச்சையை பயன்படுத்த விரும்பினால் அதன் சுவையை மேலும் கூட்ட சிறிதளவு தேன் சேர்த்துக்கொள்வது நல்லது.
காரத்தன்மையுடைய காய்கறிகள்: எலுமிச்சை சாறில் அமிலத்தன்மை உள்ளது. இவற்றை கீரைகள் மற்றும் கார வகையைச் சேர்ந்த காய்கறிகளுடன் இணைக்கும்போது அவை கருமையாக மாறும். இதை கீரையில் சேர்த்தால் அதன் துடிப்பான பச்சை நிறத்தை இழக்க நேரிடும்.
எனவே, காரத்தன்மை அதிகம் கொண்ட காய்கறிகளுடன் எலுமிச்சைச் சாறு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பால் பொருட்கள்: எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், பால் பொருட்களுடன் சேர்க்கப்படும்போது அத்துடன் வினைபுரிந்து திரிந்து போகிறது. மேலும், இவை இரண்டையும் இணைத்து உட்கொள்ளும்போது கடுமையான நெஞ்செரிச்சல் போன்ற வயிற்றுப் பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, பால் பொருட்களில் எலுமிச்சையை சேர்ப்பதைத் தவிர்க்கவும்.