பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் பலி
பாகிஸ்தானில் கராச்சி நகரில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ்சில் பயணம் செய்த குழந்தைகள் பெண்கள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர்.
துர்பத்தில் இருந்து குவெட்டா நோக்கி சென்று கொண்டிருந்த பஸ், வாசுக் நகருக்கு அருகே விபத்தில் சிக்கியது.
இந்த விபத்துக்குக் காரணம் பஸ் அதிவேகத்தில் இயக்கப்பட்டதே என்று கூறப்படுகிறது. ஆனால், பஸ்சின் டயர் வெடித்து விபத்து நேரிட்டதாக, அந்நாட்டிலிருந்து வெளியாகும் சில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கி காயமடைந்த 22 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் சாலை விதிகளை சரியாக பின்பற்றாததாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை போக்குவரத்துத் துறை கடைப்பிடிக்காததாலும் இதுபோன்ற சாலை விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன.
இந்த மே மாதத்தில் மட்டும் 18-ம் தேதி நேரிட்ட விபத்தில் 13 பேரும், கடந்த 3-ம் தேதி நேரிட்ட விபத்தில் 20 பேரும் பலியானது குறிப்பிடத்தக்கது.