தென்கொரிய மின்கலன் ஆலையில் தீ விபத்து : 22 பேர் மரணம்
தென் கொரிய லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 18 சீன பிரஜைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இது பல ஆண்டுகளில் நாட்டின் மிக மோசமான தொழிற்சாலை பேரழிவுகளில் ஒன்றாகும்.
தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, லித்தியம்-அயன் பேட்டரிகள் பரிசோதிக்கப்பட்டு பேக் செய்யப்பட்ட இரண்டாவது மாடியில் இருந்து தொழிலாளர்கள் தொடர் வெடிப்புச் சத்தம் கேட்டதாக தீயணைப்பு வீரர் கிம் ஜின்-யங் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், 20 வெளிநாட்டினர் உட்பட இருபத்தி இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
18 சீனர்கள், ஒருவர் லாவோஸைச் சேர்ந்தவர், மற்றும் அறியப்படாத நாட்டவர் ஒருவர் என அவர் தெரிவித்தார்.
“பெரும்பாலான உடல்கள் மோசமாக எரிக்கப்பட்டுள்ளன, எனவே ஒவ்வொன்றையும் அடையாளம் காண சிறிது நேரம் எடுக்கும்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
தீயணைப்பு வீரர்கள் “அருகிலுள்ள தொழிற்சாலைகளுக்கு தீ பரவாமல் தடுக்க குளிர்விக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்று கிம் தெரிவித்தார்