சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய வீரர்கள்

#India #T20 #Cricket #WorldCup #Player #Retire
Prasu
2 months ago
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய வீரர்கள்

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி பார்படாஸ் நகரில் இன்று நடந்தது. இதில், இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் விளையாடின. 

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

177 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களே எடுத்தது. இதனால், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. 

போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோகித் சர்மா, இதுவே என்னுடைய இறுதி போட்டி. ஓய்வு பெற இதனை விட மிக சிறந்த தருணம் இல்லை. கோப்பையை வெல்ல வேண்டும் என்று மிக அதிகம் விரும்பினேன். அதனை வார்த்தைகளால் கூறுவது மிக கடினம் என்று கூறினார். 

இந்த நிலையில் போட்டி முடிந்ததும் ஆட்ட நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. அப்போது டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கோலி கூறினார். 

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது; இதுவே எனது கடைசி டி20 உலகக்கோப்பை போட்டி. இந்த வெற்றியைத்தான் நாங்கள் அடைய விரும்பினோம். இந்தியாவுக்காக விளையாடும் கடைசி டி20 போட்டியும் இதுதான். 

கோப்பையை வெல்ல விரும்பினோம்.அடுத்த தலைமுறை இருப்பதால் நான் விலக முடிவெடுத்துள்ளேன் என அறிவித்தார். 

இதனை தொடர்ந்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நன்றி நிறைந்த இதயத்துடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடை பெறுகிறேன். 

ஒரு வலிமையான குதிரை துள்ளிக் குதிப்பதைபோல, எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததை செய்து வருகிறேன். ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்.

 டி20 உலகக் கோப்பையில் கோப்பையை வெல்லவேண்டும் என்ற கனவு நனவாகிவிட்டது. இது எனது உச்சம். என்னுடைய நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், உங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.