சாவகச்சேரியில் என்னதான் நடக்கிறது?

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
3 months ago
சாவகச்சேரியில்  என்னதான் நடக்கிறது?

சாவகச்சேரி வைத்திய சாலை பிரச்சினை தமிழருக்குக் கிடைச்சிருக்கும் இறுதி வாய்ப்பு.

என்ன வாய்ப்பு? இறுதி வரை வாசியுங்கள் சொல்கிறேன்.

இந்த பிரச்சினை பற்றிய எனது கேள்விகள்.

1. இப்போதைய வைத்திய அத்தியகட்சரை சாவகச்சேரிக்கு நியமிக்க வேண்டாம் என பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் சுகாதார அமைச்சுக்கு அழைப்பெடுத்து சொன்னதாக வைத்திய அத்தியகட்சர் சொல்கிறார்.

ஆக, இந்தப் பிரச்சினை வைத்திய அத்தியகட்சர் நியமனத்திற்கு முன்பே ஆரம்பித்துள்ளது.

எதற்காக வைத்தியர் கேதீஸ்வரன் குறித்த வைத்திய அத்தியகட்சர் சாவகச்சேரிக்கு நியமிக்கப்படக்கூடாது எனத் தடுக்க முனைந்தார்?

2. வைத்தியர் கேதீஸ்வரன் தடைசெய்யப்பட்ட போதை மருந்துகளை கடத்தி பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ய உதவி செய்வதாக குறித்த வைத்திய அத்தியகட்சர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு பாரிய கிரிமினல் குற்றச்சாட்டு.

இந்த குற்றச்சாட்டு மீது இதுவரை மாகாண சபை பணிப்பாளரோ, வடமாகாண சுகாதார சேவை செயலாளரோ அல்லது ஆளுனரோ வைத்தியர் கேதீஸ்வரன் மீது விசாரணையை கோராமல் இருப்பதற்கான காரணம் என்ன?
இப்படி ஒரு பாரிய கிரிமினல் குற்றத்தை ஒரு வைத்திய அத்தியகட்சர் பொதுவெளியில் துணிந்து முன்வைத்த பின்பும் , குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை எதுவும் இல்லாமல் ஒரு உயர் பதவியில் தெடர்வது மக்களுக்குப் பாதூகாப்பானதா?

3. பிரச்சினையின் ஆரம்பத்தில் மாகாண சபை பணிப்பாளர் , வைத்திய அத்தியகட்சரிடம் , " மத்திய சுகாதார அமைச்சு, வாய்வழி அறிவுறுத்தியதன் காரணமாக உங்களை இடமாற்றேகிறோம்" என்கிறார்.

அதற்கு வைத்திய அத்தியகட்சர் " சுகாதார அமைச்சின் வாய்வழி கோரிக்கையை ஏற்க மாட்டேன், கடிதம் தாருங்கள் என்கிறார்.

அந்தக் கடிதத்தை மத்திய சுகாதார அமைச்சு அன்றே கொடுத்திருந்தால் , இந்தளவு பிரச்சினை வந்திருக்காது. ஆனால் ஒரு மணி நேரத்தில் , பக்ஸ் பண்ணக்கூடிய கடிதத்தை மத்திய அமைச்சு ஏன் இதுவரை அனுப்பாமல் இழுத்தடிக்கிறது.
வைத்திய அத்தியகட்சர் மத்திய சுகாதார செயலாளர் தன்னை தொடர்ந்து வேலை செய்ய சொல்வதாக சொல்கிறார்.

மத்திய அமைச்சு இடமாற்ற சொன்னதாக மாகாண சேவை பணிப்பாளர் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறாரா?

அல்லது மத்திய அமைச்சு மாகாண பணிப்பாளருக்கு ஒரு விடயத்தை சொல்லி, வைத்திய அத்தியகட்சருக்கு அதற்கு எதிர்மாறான விடயத்தைச் சொல்லி சாவகச்சேரியில் பிரச்சினையை உருவாக்க விரும்பியதா?

4. ஒரு மாகாண சபையின் கீழ் இயங்கும் வைத்திய சாலை இரண்டு நாள் மூடப்பட்ட பின்பும் , வடமாகாண ஆட்சியாளராக இருக்கும் ஆளுனர் தனக்கு இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அதிகாரம் இல்லை என அசண்டையீனமாக இருக்க காரணம் என்ன?

5. ஒரு வைத்தியசாலை இரண்டு நாளாக மூடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாகாண அமைச்சு தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்கிறது. அப்படியென்றால் இந்த பிரச்சினையை தீர்ககும் அதிகாரம் யாரிடமுள்ளது?

6. வைத்திய அத்தியகட்சர் , கட்டடம் கட்ட கிடைத்த 400 மில்லியன் பணத்தில் 200 மில்லியனே கட்டடம் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளதாக சொல்கிறார். அந்தப் பணத்தை புலம்பெயர் அமைப்புக்களே கொடுத்துள்ளது என நினைக்கிறேன்.

அந்தப் பணம் கச்சேரி ஊடாக வந்ததா? அப்படியென்றால் 200 மில்லியன் கையாடல் நடந்ததிற்கும் GA மற்றும் கச்சேரி ஊழியர்களிற்கும் தொடர்பு உள்ளதா?
கச்சேரி ஊடாக வராமல் விட்டிருந்தால் எப்படி இந்தப் பணம் வந்து சேர்ந்தது. எந்தப் புள்ளியில் யார் யாரால் இந்த 200 மில்லியன் ரூபாயும் கையாடல் செய்யப்பட்டது.

7. வைத்திய அத்தியகட்சர் இந்தக் கட்டிடம் 3 தடவை திறக்கப்பட்ட போதும் கடந்த 12 வருடமாக இயங்காத நிலையில் மூடி வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்.
வைத்திய சாலைச் சமூகமோ இது 2015 கட்டப்பட தொடங்கி போன மாதமே திறப்பு விழா நடந்ததாக சொல்கிறது. இதில் எது உண்மை?

8. புதிய வைத்தியசாலை கட்டிடம் இயங்காமல் இருக்கக் காரணம் மின்பிறப்பாக்கி இல்லை என்று வைத்திய சாலை சமூகம் சொல்கிறது. ஆனால் வைத்திய அத்தியகட்சர் தான் மூன்று நாளில் புதிய கட்டிடத்தில் விடுதிகள், அவசர சிகிச்சைப் பிரிவுகளை தொடங்கியதாக சொல்கிறார். 

மின்பிறப்பாக்கி இல்லாத நிலையில் , மின்சாரம் தடைப்பட்டால் , மின்சாரத்தில் நம்பி இருக்கும் உயிர் காக்கும் கருவிகள், கண்காணிப்பு கருவிகள் போன்றவை இல்லாமல் நோயாளிகளுக்கு உயிராபத்து ஏற்படலாம் என்பதை ஒரு மருத்துவ நிர்வாகம் படித்தவர் அறியாமல் இருக்கமாட்டார். அதனால் அவர் அதற்கு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்துதான் புதிய விடுதியைத் திறந்திருப்பார். அந்த மாற்று ஏற்பாட்டை ஏன் இதற்கு முன் இருந்தவர்கள் செய்து அந்த விடுதியைத் திறக்கவில்லை.

9. வைத்தியசாலை சமூகம், குறித்த மின்பிறப்பாக்கி அமைச்சுக்கு வந்து சேர்ந்திருந்தாலும் அதை வைக்க கட்டிடம் இல்லாததால் இன்னும் சாவகச்சேரிக்கு கொண்டு வரப்படவில்லை என்கிறது. ஆனாலும் இப்போது கட்டிடம் கட்டப்பட்டுக்கொண்டுள்ளது அதனால் தாங்கள் ஒரு மாதமளவில் மின் பிறப்பாக்கியைக் கொண்டு வந்து புதிய கட்டிடத்தில் வைத்தியசாலையை பாதுகாப்பாக தொடங்க எண்ணி இருந்ததாக சொல்கிறது.

உண்மையில் மின்பிறப்பாக்கி கொள்வனவு செய்யப்பட்டு விட்டதா? அதை வைக்க கட்டடம் கட்டப்படுகிறதா?

10. மின்பிறப்பாக்கி வைக்க இடமில்லாமல் 400 மில்லியன் ரூபாய் பட்ஜெட் செலவாகும் கட்டிடத்தை கட்டும் திட்ட வரைபுக்கும் , விலை மனுக்கோரலுக்கும் அனுமதி வழங்கியது யார்? விலைமனுக்கோரல் எப்போது எப்படி பெறப்பட்டது?
குறித்த கட்டுமான பணி செய்த ஒப்பந்தகாரருக்கும், அந்த அரைகுறை வரைபை அனுமதித்தவர்களுக்கும் , வைத்திய அத்தியகட்சர் முன் வைக்கும் 200 மில்லியன் கையாடலுக்கும் தொடர்பு உள்ளதா?

11. சட்ட மருத்துவ அதிகாரி தன் அலுவலகத்தை வைத்திய சாலையில் மறைவான இடத்தில் வைத்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக வைத்திய அத்தியகட்சர் மீது குற்றம் சாட்டுகிறார். இதுபற்றி என்ன விசாரணை கோரப்பட்டுள்ளது? குறித்த சட்ட மருத்துவ அதிகாரி இன்னும் கடமையில் உள்ளாரா?

12. ஆக சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியர் கேதீஸ்வரன் மீது இரண்டு பாரிய கிரிமினல் குற்றங்களை வைத்திய அத்தியகட்சர் வைத்துள்ளார். அது சம்பந்தமாக இருவரும் தங்கள் கருத்தை முன்வைத்துள்ளார்களா? அந்த குற்றச்சாட்டுக்களை அவர்கள் மறுத்தால் , அதற்கு என்ன விதமான சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள்? சட்ட நடவடிக்கை எடுக்காது விட்டால் , சட்ட நடவடிக்கையின் போது தங்கள் குற்றம் ஊர்ஜிதம் ஆகிவிடும் என்று அஞ்சுகிறார்களா?

13. வைத்திய அத்தியகட்சர், GMOA பொறுப்பாளர் மயூரன் தனக்கு அடித்து தன்னிடமிருந்து பெரும் தொகை பணத்தையும் , கைபேசியையும் பறித்து சென்றதாக சொல்கிறார்.

கைபேசி திரும்பக் கிடைத்தாகச் சொல்கிறார். ஆனால் பணம் கிடைக்கவில்லை என்கிறார். அதற்கு பொலிஸ் என்ன நடவடிக்கை எடுத்தது?

கிட்டத்தட்ட மூன்று லட்சம் பணத்தை பக்கெட்டில் அத்தியகட்சர் வைத்திருந்துள்ளார். அந்த பணம் எப்படி வந்தது என்ற ஆதாரம் கட்டாயம் அவரிடம் இருக்கும். அந்த ஆதாரத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வைத்திய அத்தியகட்சருக்கு மீண்டும் அந்தப் பணம் கிடைக்க பொலிஸ் என்ன நடவடிக்கைகளை எடுக்கிறது?

14. இவ்வளவு காலமும் மரணமான உடல்களை யாழ்ப்பாணம் அனுப்புவது அல்லது விடுவிக்க காலதாமதமாக்கியதாக வைத்திய அத்தியகட்சர் குற்றம் சாட்டுகிறார். உடலை விடுவிக்க சட்ட மருத்துவ துறையினரும் , வைத்திய ஊழியர்களும் பணம் கோருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். வைத்திய அத்தியகட்சர் தான் கடமை ஏற்ற உடனேயே இறந்தவர்களின் உடலை இரண்டு மணி நேரத்தில் விடுவிக்க ஏற்பாடு செய்ததாக சொல்கிறார்.
புதிதாக கடமை ஏற்ற ஒரு இளம் வைத்திய அத்தியகட்சரால் ஒரு இறந்த உடலை இருமணிநேரத்தில் விடுவிக்க கூடியதாக இருக்கும்போது, யாழ்மாவட்ட சட்ட மருத்துவ துறை பொறுப்பாளர்கள் இதுவரை ஏன் இந்த விடயத்தில் அசண்டையீனமாக இருந்தனர்?
.

சரி தலைப்பிலே இது தமிழர்களுக்கு இறுதி வாய்ப்பு என்றேன். ஆம் , மாகாண சபை சார்ந்த ஒரு பிரச்சினையை நம்மாள் கையாள முடியுமா, அதற்கான அடிப்படை தகுதியாவது நம் இனத்துக்கு உள்ளதா அல்லது இதற்கும் தீர்வு தாங்க என்று சிங்களவரிடம் போய் கை கட்டி நிற்கனுமா என்று பரீட்சிக்க கிடைத்திருக்கும் இறுதி வாய்ப்பு இது.

அதுதவிர , வடமாகாண சுகாதார சேவையை திட்டமிட்டு அழிக்கவே வைத்திய அத்தியகட்சர் அரசியல்ரீதியாக அனுப்பி உள்ளதாக GMOA கூறுகிறது. இதையும் ஆராய்ந்து உண்மைத் தன்மையை அறிய வேண்டிய பொறுப்பு உள்ளது.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஆளுனர் உடனடியாக வைத்தியர் கேதீஸ்வரன் மற்றும் சட்டமருத்துவ அதிகாரி மீது சொல்லப்பட்டிருக்கும் கிரிமினல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க பொலிஸை பணிக்க வேண்டும். வைத்திய அத்தியகட்சரிடமுள்ள ஆதாரங்களை ஆளுனர் பொலிசிடம் கொடுக்க வேண்டும் . இவற்றுக்குக்கொஞ்சம் காலம் எடுக்கலாம்.

ஆனால் கட்டட கட்டுமான கையாடலை இலகுவாக கண்டு பிடிக்கலாம்.

கட்டடம் கட்ட பணம் எப்படி வந்தது, ஒப்பந்தாரர் எப்படி தெரிவு செய்யப்பட்டார், திட்டவரைபு மற்றும் ஒப்பந்த தொகை சரியானதா என்பதை ஆளுனர்.நினைத்தால் ஒரு நாளிலே கண்டு பிடிக்கலாம் . அந்த விபரங்களை பொதுமக்களுக்கும் அறிவிக்க வேண்டும். அந்த கணக்கு வழக்கில் கையாடல் நடந்ததாக சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக பொலிஸா விசாரணை கோரப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறித்த கட்டிடம் எப்போது கட்டப்பட்டது, வைத்திய அத்தியகட்சர் சொன்னது போல 3 முறை திறக்கப்பட்டது என்றால் எந்த எந்த திகதிகளில் யாரால் திறக்கப்படடது என்பதை ஆளுனர் ஒரு தொலை பேசி அழைப்பிலேயே அறிந்து வெளிப்படுத்தலாம். வைத்திய அத்தியகட்சர் சொன்னது போல் மூன்று முறை பணம் செலவழித்து விழா எடுத்து திறந்தும் 12 வருடமாக கட்டடம் மூடிவைக்கப்பட்டது உண்மை என்றால் அந்த 12 வருடகாலமும் வடமாகாண சுகாதார பணிப்பாளர்களாக இருந்த அனைவரிடமும் ஆளுனர் விளக்கம் கோர வேண்டும்.

வைத்திய சாலை சமூகம் சொல்வது போல் மின்பிறப்பாக்கி கொள்வனவு செய்யப்பட்டு விட்டதா? அதற்கான கட்டடம் கட்டப்படுகிறதா என்பதை ஆளுனர் ஒரு தொலை பேசி அழைப்பிலேயே உறுதி செய்யலாம். அதன் பின் மின்பிறப்பாக்கி இல்லாத நிலையில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய என்ன மாற்று வழிமுறையூடாக குறுகிய காலத்தில் வைத்திய அத்தியகட்சர் அந்த கட்டடத்தை திறந்தார் எனவும் இலகுவாக அத்தியகட்சரக்கு அழைப்பொடுத்து அறியலாம்.
மின்பிறப்பாக்கி கதை உண்மையாக இருந்து, வைத்திய அட்சகர் மின்தடை ஏற்பட்டால் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாற்று ஏற்பாடு இல்லாமல் புதிய கட்டத்தில் வைத்திய சாலையை இயங்க வைத்திருந்தால், ஏன் அவர் இன்னுமொரு மாதம் காத்திருக்காமல் நோயாளிகளுக்கு உயிராபத்து ஏற்படும் இந்த முடிவை எடுத்தார் என ஆளுனர் வைத்திய அத்தியகட்சரிடமே கேட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கலாம்.

ஆரம்ப முறைப்பாட்டுக் கடிதத்தில் வைத்திய அத்தியகட்சருக்கு உள நோய் உள்ளது என்றும் அதற்காக அவர் பரிசோதிக்கப்பட வேண்டும் என ஏனைய வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

பல வைத்தியர்கள் சேர்ந்து இன்னொரு வைத்தியர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு பொய்யாக வைத்திருந்தால் அது பாரிய தவறு.

அதனால் அதற்கும் ஆளுனர் விசாரணை அமைக்க வேண்டும். இலகுவாக யாழில் இருக்கும் உளவியல் நிபுணர்கள் இருவரை , குறித்த வைத்திய அத்தியகட்சரின் உளவியலை பரிசோதனை செய்து நாளைக்கே ரிப்போர்ட் தர சொல்லி கேட்பது ஆளுனருக்கு பெரிய கஷ்டமில்லை. அந்தப் பரிசோதனையில் வைத்திய அத்தியட்சரின் உளவியல் பிரச்சினைக்கும் இந்தப் பிரச்சினைக்கும் தொடர்பு இல்லை என்று நிரூபணமானால் அந்த குற்றசாட்டுக்களை முன்வைத்த வைத்தியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படி ஆளுனர் ஒரே நாளில் விசாரித்து உண்மைத் தன்மையை அறியக்கூடிய பல குற்றச்சாடடுக்கள் உள்ளன. அவற்றை நாளைக்கே ஆளுனர் விசாரித்து பொது மக்களுக்கு தெளிவு படுத்தலாம்.

சில விசாரணைகளுக்கு கொஞ்ச காலம் எடூக்கலாம்.

அதுவரை இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு?

பொதுமக்களின் நலன் கருதி சாவகச்சேரி வைத்திய அத்தியகட்சரை பருத்திததுறை அல்லது தெல்லிப்பளை வைதியசாலைக்கு தற்காலிகமாக மாற்றி , அங்கே இருக்கும் அத்தியகட்சரை சாவகச்சேரி வைத்தியசாலையை ஒரு மாதத்திற்காவது கவனிக்கும் படி ஒரு கோரிக்கையை முன் வைக்கலாம். அல்லது வைத்திய அத்தியகட்சர் விரும்பும் இடத்திற்கு தற்காலிக மாற்றல்ஸவழங்கலாம்.

பொது மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் , சாவகச்சேரியில் இப்போதைய வைத்திய அத்தியகட்சர் இருக்கத்தக்கதாகவே இன்னொரு shadow அத்தியகட்சரை நியமித்து அவரின் கீழ் தற்காலிகமாக கடமைகளை ஆரம்பிக்கும்படி வைத்தியர்களை கேட்கலாம்.

விசாரணைகள் முடிந்தபின் அந்த முடிவுகளின்படி மேலதிக அடுத்த கட்டத்தை தீர்மானிக்கலாம்.

பொதுநலம் சார்ந்த குற்றச்சாட்டுக்களை மட்டுமே இங்கு கேள்விக்கு உட்படுத்தி விளக்க முற்பட்டுள்ளேன்.

அது தவிர தனிநபர் சார்ந்த பிரச்சினைகள், தாபன விதி மீறல் போன்ற விடயங்கள் நிறைய இந்தப் பிரச்சினையில் உள்ளது அவற்றை அந்த அந்தத் திணைக்களங்களும் , தனி நபர்களும் பார்ததுக் கொள்ளட்டும்.

குறிப்பாக இந்த பிரச்சினையில் ஈடுபட்ட/ பெயர் அடிபட்ட அத்தனை வைத்தியர்களினதும் (மாகாண சபை பணிப்பாளர், RDHS உட்பட ) அனைவரது நடவடிக்கைகளும் மருத்துவ நியமங்களுக்கு உட்பட்டதா என்பதை இலங்கை மருத்துவ சபை விசாரிக்க வேண்டும்.

குறிப்பு: இதில் நான் யாருக்கு சார்பாகவோ அலலது எதிராகவோ எதையும் கூற வில்லை. ஒவ்வொருவரும் சொன்ன பிரச்சினைகளை எப்படி அனுகி தீர்வு காணலாம் என்ற ஒரு விளக்கத்தை மட்டும் கூறியுள்ளேன்.

நன்றி வைத்தியர்
சி. சிவச்சந்திரன்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!