அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு - 4 பேர் மரணம்
அமெரிக்கா தெற்கு கரோலினி மாகாணம் கெண்டகி நகரில் உள்ள ஒரு வீட்டில் 21 வயது வாலிபர் பிறந்த நாள் கொண்டாடினார்.
ஆட்டம்-பாட்டம் கொண்டாட்டத்துடன் நடந்த இந்த விழாவில் நண்பர்கள், உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது விருந்தில் பங்கேற்ற ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார்.
இதனால் பயந்து விருந்தில் பங்கேற்றவர்கள் சிதறி ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே 4 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கியால் சுட்டவரை பிடிக்க போலீசார் அதிரடி வேட்டை நடத்தினார்கள். அப்போது அவர் அங்குள்ள வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். குண்டு காயம் அடைந்த அவரை போலீசார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். எதற்காக அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.