துருக்கி விமான நிறுவனத்தை மூடி ஈரான் அரசு அதிரடி
ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.இதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் தலைநகர் தெக்ரானில் உள்ள துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்தில் பணி யாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணியாமல் பணி செய்வ தாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அந்த அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இதனால் அப்போது பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணியாமல் இருப்பது தெரியவந்தது.
துருக்கி விமான நிறுவன அலுவலகத்தை ஈரான் அரசு மூடியுள்ளது. அந்த அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்தனர்.
இதுதொடர்பாக அந்நாட்டு ஊடகம் ஒன்று கூறும் போது, துருக்கி ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு போலீஸ் அதிகாரிகள் சென்று ஊழியர்கள் ஹிஜாபைக் கடைப்பிடிக்காதது குறித்து முதல் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால் ஊழியர்கள் போலீஸ் அதிகாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். இதனால் அந்த அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து துருக்கி ஏர்லைன்ஸ் உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
கடந்த 2022-ம் ஆண்டு ஹிஜாப் சரியாக அணிய வில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதனால் ஈரானில் போராட்டங்கள் வெடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.