தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ படிவங்களில் கையெழுத்திட்ட கமலா ஹாரிஸ்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிசுக்கு முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் (81) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஆனால் வயோதிகம் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என சொந்த கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்புகள் வலுத்தன.
பின்னர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார். மேலும் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிசுக்கு(59) தனது முழு ஆதரவை அளிப்பதாக ஜோ பைடன் தெரிவித்தார்.
அதே போல் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்பட, கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்கள் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிகாரப்பூர்வ படிவங்களில் இன்று கையெழுத்திட்டேன். ஒவ்வொரு வாக்கையும் பெறுவதற்கு கடுமையாக உழைப்பேன். நவம்பர் மாதம் நமது மக்கள் சக்தி பிரசாரம் வெற்றி பெறும்" என்று பதிவிட்டுள்ளார்.