நாளை ஆடி அமாவாசை விரதம்: நீங்கள் செய்ய வேண்டியவை
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை விரதமானது தமிழர்கள் மத்தியில் மிக முக்கிய விரத நாளாகும். அதுவும் குறிப்பாக தந்தை இல்லாதவர்கள் அனுஸ்டிக்கும் விரதநாளாகும்.
அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.
மேலும் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையன்று முன்னோர்க்கு ‘ பிதுர் கடன்’ கொடுத்தால் அது அவர்களை நேரடியாக சென்றடையும் என்பதும் நம்பிக்கை.
அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை நாட்கள் மிகுந்த சிறப்பு வாய்ந்தவை.
முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசியை பெறுவதற்கு ஏற்ற நாளாக அமாவாசை கருதப்படுகிறது. வருடத்திற்கு மூன்று அமாவாசைகள் மிக முக்கியமானதாகும். தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகியவற்றில் கண்டிப்பாக பித்ரு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆடி அமாவாசை என்பது நமது முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காக பித்ரு லோகத்தில் இருந்து புறப்பட்டும் நாளாகும். இதனால் தான் ஆடி மாதம் என்பது தட்சணாயன காலம் என சொல்லப்படுகிறது.
இம்முறை ஆகஸ்ட் 03ம் திகதி மாலை 04.56 மணி துவங்கி, ஆகஸ்ட் 04 ம் தேதி மாலை 05.32 மணி வரை அமாவாசை திதி உள்ளது. நாம் செய்யும் தர்ப்பணத்தை ஏற்றுக் கொண்டு, முன்னோர்கள் வழங்கும் அருளையும், ஆசியையும் நமக்கு வழங்கக் கூடிய கிரகமான சூரிய பகவானுக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் ஆடி அமாவாசை வருவது மிக சிறப்பானதாகும்.
அமாவாசை நாளில் செய்யவேண்டியவை
பொதுவாகவே அமாவாசை என்றால் வீட்டை சுத்தம் செய்து, விரதம் இருந்து, காகத்திற்கு உணவு வைத்த பிறகு நாம் உணவு சாப்பிடுவது தான் வழக்கம். மற்ற எந்த ஒரு விரதமும் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அமாவாசை விரதம், குறிப்பாக ஆடி அமாவாசை விரதம் எல்லோரும் இருக்க கூடாது. தாயை அல்லது தந்தையை அல்லது இருவரையும் இழந்த ஆண்கள் ஆடி அமாவாசை நாளில் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
அமாவாசை அன்று சூரிய உதயத்திற்கு முன்பே கடற்கரை, மகாநதிகள், ஆறுகள், குளங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் தர வேண்டும்.
பித்ருக்களுக்கு பூஜை செய்து, அந்தணர்களுக்கு பூசணிக்காய், வாழைக்காய், போன்ற காய்கறிகள் தானம் கொடுக்க வேண்டும்.
பின்னர் வீட்டில் இருக்கும் முன்னோர் படங்களுக்கு துளசி மாலை அணிவித்து, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்து பிறகே சாப்பிட வேண்டும்.
ஆடி அமாவாசை தினம் கோடி சூரிய கிரகணத்திற்கு சமம். எனவே நீர் நிலைகளுக்கு சென்று பித்ரு தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி, வீட்டிலோ அல்லது சிவன் கோயிலிலோ வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.
சுமங்கலி பெண்கள் ஆடி அமாவாசை விரதம் இருக்கக் கூடாது. அவரின் கணவர் மட்டுமே மறைந்த தனது பெற்றோர்களுக்காக விரதம் இருக்க வேண்டும். கணவர் ஆடி அமாவாசை விரதம் இருக்கும் போது அவருக்கு சமைக்கும் மனைவி, சாப்பிடாமல் உணவு சமைக்கக் கூடாது. ஒரு பிடியாவது அன்னத்தை சாப்பிட்ட பிறகே விரதத்திற்கு சமைக்க வேண்டும்.
திருமணமான பெண், இறந்து போன தனது பெற்றோரை நினைத்து அமாவாசை நாளில் தானம் கொடுக்கலாம், யாராவது நான்கு பேருக்கு உணவு வாங்கிக் கொடுக்கலாம். ஆனால் விரதம் இருப்பதோ, தர்ப்பணம் கொடுப்பதோ கூடாது. அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு அவர்களின் உடன் பிறந்த சகோதரர்கள் தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஒருவேளை அந்த பெண்ணிற்கு உடன் பிறந்த ஆண்கள் இல்லை என்றால் அப்போது தனது பெற்றோர்களுக்காக அந்த பெண் தர்ப்பணம் கொடுக்கலாம்.
முன்னோர்களுக்கு வீட்டில் இலை போட்டு படையல் போடுபவர்கள் பகல் 12 மணிக்குள் போட்டு விட வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் பகல் 01.30 மணிக்கு பிறகு, அதாவத எமகண்ட நேரம் நிறைவடைந்த பிறகு படையல் போட்டு வழிபடலாம். வீட்டில் இருக்கும் முன்னோர்களின் படங்களை எடுத்து வைத்து, அதற்கு பூ போட்டு, ஒரு விளக்கேற்றி வைக்க வேண்டும். பிறகு இலை போட்டு, அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை சமைத்தோ அல்லது வீட்டில் சமைத்த உணவுகளையோ படையலாக இட்டு வழிபட வேண்டும். காகத்திற்கு இலை போட்டு உணவு படைத்த பிறகே, வீட்டில் உள்ளவர்கள் உணவு உண்ண வேண்டும். குறிப்பாக வீட்டில் இருக்கும் ஆண்கள் காலை முதல் உபவாசமாக இருந்து, படையல் போட்ட பிறகே, உணவு சாப்பிட வேண்டும்.
பகலில் படையல் இட்டு வழிபட்ட பிறகு, மாலையில் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று, முன்னோர்களை நினைத்து நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். இது அவர்களுக்கு மோட்சத்தை அளிக்கும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டில் வழக்கமாக ஏற்றும் விளக்கினை ஏற்றினாலும், தனியாக ஒரு அகலில் முன்னோர்களுக்காக நெய் விட்டு விளக்கேற்றி வழிபட வேண்டும். அன்றைய தினம் யாராவது இரண்டு பேருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும். ஏழைகளுக்கு அவர்களுக்கு வேண்டிய பொருட்களையும் வாங்கிக் கொடுக்கலாம்.