கமலா ஹாரிஸ் உடன் விவாதம் நடத்த ஒப்புக்கொண்ட டொனால்டு டிரம்ப்

#Election #America #President #Trump #Debate #KamalaHarris
Prasu
1 month ago
கமலா ஹாரிஸ் உடன் விவாதம் நடத்த ஒப்புக்கொண்ட டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. 

அவரை எதிர்த்து ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் (வயது 81) போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தேர்தல் விவாத நிகழ்ச்சியில் டிரம்ப்-ன் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ஜோ பைடன் திணறினார். வேட்பாளரை மாற்ற கட்சியில் பல தலைவர்கள் போர்க்கொடி துாக்கினர். 

இதையடுத்து அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார். துணை அதிபர் கமலா ஹாரிஸை (வயது 59) ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக பரிந்துரை செய்தார். 

அவர் மட்டுமே ஜனநாயக கட்சியில் வேட்பாளராக உள்ளதால் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான ஆதரவை பெற்றுள்ளார்.

விரைவில் வேட்புமனு தாக்கல் செய்து கட்சி பொதுக்கூட்டத்தில் டிரம்ப்-ஐ எதிர்த்து போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார்.

ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியான நிலையில், பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்துடன் கமலா ஹாரிஸ் உடன் நேரடி விவாதத்தில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளார். 

செப்டம்பர் 4-ந்தேதி நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் டிரம்ப் விவாதம் நடத்த ஒப்புக் கொண்ட நிலையில் கமலா ஹாரிஸ் ஒப்புக்கொண்டாரா? என்பது தெரியவில்லை.

 முன்னதாக கமலா ஹாரிஸை எளிதில் வெற்றி கொள்வேன் என டிரம்ப் கூறி வருகிறார். மேலும் இவ்வளவு காலம் இந்தியர் என்று கூறி வந்தவர், இப்போது கருப்பர் என தன்னை அடையாளப்படுத்துகிறார் என விமர்சனம் செய்துள்ளார்.