சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் மரணம்

#Death #Attack #Somalia #Terrorists
Prasu
1 month ago
சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் மரணம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்-கொய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப் மற்றும் ஐ.எஸ். போன்ற பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 

இந்த பயங்கரவாத குழுக்களை அழிக்கும் பணிகளில் அந்நாட்டு பாதுகாப்புப் படை ஈடுபட்டு வருகிறது.

ஆனாலும், இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள லிடோ கடற்கரை அருகே அமைந்துள்ள பிரபல ஓட்டலுக்குள் அல் ஷபாப் பயங்கரவாதிகள் திடீரென உள்ளே புகுந்தனர். 

அவர்கள் ஓட்டலில் இருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் சிலரை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தனர். தொடர்ந்து, தங்கள் உடலில் மறைத்து கட்டிக்கொண்டு வந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

இந்தக் கொடூர தாக்குதலில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

 தகவலறிந்து அங்கு வந்த பாதுகாப்புப் படையினர் அதிரடியாக செயல்பட்டு பிணைக்கைதிகளை மீட்டனர். மேலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.