வங்கதேசத்தில் சமூக ஊடகங்களுக்கு மீண்டும் தடை
வங்கதேச அரசு, பல முன்னணி சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு தளங்களுக்கு தடை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வங்கதேசத்தில், அவாமி லீக் கட்சி அரியணையில் உள்ளது. அதன் பிரதமராக மீண்டும் இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஷேக் ஹஸினா பதவியில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், 1971இல் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச சுதந்திரப் போரில் போராடிய வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்து, ’’தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தற்போது ஆட்சியில் இருக்கும் அவாமி லீக் கட்சியும், இதைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையறிந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.
இதனால், கடந்த ஜூலை மாத மத்தியில் அந்நாட்டில் வன்முறை வெடித்தது. தலைநகர் டாக்கா மட்டுமல்லாது, ராஜ்ஷாஹி, குல்னா, சட்டோக்ரம் உள்ளிட்ட ஒவ்வொரு நகரங்களுமே வன்முறைகளால் வதைபட்டன.
இந்நிலையில், மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக வதந்தி பரவியதால், வங்கதேச அரசு, டெலிகிராம், ஃபேஸ்புக், யூடியூப், வாட்ஸ்அப், எக்ஸ், டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதனால், வங்கதேசத்தில் உள்ள 120 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் நெட்வொர்க் பயனர்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.