பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரருக்கு எருமை மாடு பரிசு
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்த வெற்றி மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் சாதனையை முறியடித்து தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு 10 கோடி ரொக்கப் பரிசு வழங்குவதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் அறிவித்துள்ளார்.
மேலும் அவரது சொந்த ஊரான கானேவாலில் அவரது பெயரில் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்றும் நவாஸ் தெரிவித்தார்.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு அவரது மாமனார் முகமது நவாஸ் எருமை மாட்டை பரிசாக வழங்கினார்.
அவர்களின் ஊரில் எருமை மாடு என்பது மதிப்பு மற்றும் கௌரவமிக்க ஒன்றாக கருதப்படுகிறது.
'மாபெரும் வெற்றி பெற்ற பிறகும் நதீம் தனது கிராமம் மற்றும் அவர் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமை கொள்கிறார்' என அவரது மாமனார் பெருமிதமாக தெரிவித்தார்.
நவாஸின் மகளான ஆயீஷாவை தான் நதீம் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.