இந்துக்களுக்கு உறுதி அளித்த வங்காளதேச இடைக்கால அரசின் தலைவர்
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் கடந்த 5-ந்தேதி ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அரசு கவிழ்ந்தது. அதன்பின் போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துகளை நாசப்படுத்த தொடங்கினர்.
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்களுக்கு சொந்தமான இடங்களை தீவைத்து கொளுத்தினர்.
மைனாரிட்டி இந்துகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர். அவாமி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்த இரண்டு தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
ஒரு கட்டத்திற்குப் பிறகு பாதுகாப்பு கேட்டு இந்துக்களும் போராட்டத்தில் குதித்தனர். ஷேக் ஹசீனா பதவி விலகி ஒரு வாரத்திற்கும் மேலாகியும் வன்முறை முடிவுக்கு வரவில்லை.
இதற்கிடையே நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் முகமது யூனுஸ் டாக்காவில் உள்ள புகழ் வாய்ந்த தாகேஷ்வரி கோவிலுக்கு சென்றார். பின்னர் "உரிமைகள் அனைவருக்கும் சமமானது.
வங்காளதேசத்தில் உள்ள மைனாரிட்டிகளின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், நாம் அனைவரும் ஒரே உரிமை கொண்ட மக்கள். நமக்குள் எந்த வேறுபாட்டையும் காட்ட வேண்டாம்.
தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள். பொறுமையை கடைப்பிடிக்கவும், எங்களால் என்ன செய்ய முடிந்தது மற்றும் செய்யவில்லை என்பது குறித்து பின்னர் தீர்ப்பளிக்கவும். தோல்வியடைந்தால், எங்களை விமர்சியுங்கள் எனத் தெரிவித்தார்.