காங்கோ நாட்டை தொடர்ந்து ஸ்வீடனில் குரங்கம்மை பாதிப்பு
ஆப்பிரிக்க கண்டத்திற்கு வெளியே முதன்முதலில் குரங்கம்மை (எம்-பாக்ஸ்) பாதிப்பு ஸ்வீடனில் பதிவாகியுள்ளது.
குரங்கம்மை நேயானது வேகமாக பரவி வரும் ஒன்று என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குரங்கம்மை (எம்-பாக்ஸ்) நோய்த்தொற்றை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எம்-பாக்ஸ் அல்லது குரங்கம்மை, கொடிய நோய்த்தொற்று வகையைச் சேர்ந்தது.
இது முதலில் கொங்கோ நாட்டில் வேகமாகப் பரவியதால் சுமார் 450 நபர்கள் உயிரிழந்தனர். தற்போது, இந்த நோய்த்தொற்று மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவி வருகிறது.
மேலும் இந்த வைரஸின் புதிய வகை திரிபு (Variant) மக்கள் மத்தியில் பரவும் வேகம் மற்றும் இதனால் அதிகரிக்கும் இறப்பு விகிதம் குறித்து விஞ்ஞானிகள் கவலையில் உள்ளனர்.
ஆப்பிரிக்கா மட்டுமின்றி அதைத் தாண்டியும் இந்நோய் பரவுவதற்கான சாத்தியம் இருப்பது ‘மிகவும் கவலை அளிப்பதாக’ என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.