தாக்குதலுக்கு பிறகு பலத்த பாதுகாப்புடன் முதல் வெளிப்புற பேரணியில் பங்கேற்ற டிரம்ப்
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடக்கு கரோலினாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின் முதல் முறையாக பொது வெளியில் உரையாற்றிய டிரம்ப், பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென உரையை நிறுத்திவிட்டு தனக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாக தெரிவித்தார்.
துப்பாக்கி சூடு சம்பவத்தில் நூலிழையில் உயிர்தப்பிய டிரம்ப் முதல் முறையாக பொது வெளியில் பேசுவதால், அவரை சுற்றி தோட்டாக்களை தடுத்து நிறுத்தும் புல்லட் ப்ரூப் கண்ணாடி அரண் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டு இருந்தது.
கண்ணாடி அரணில் நின்று உரையாற்றிக் கொண்டிருந்த முன்னாள் அதிபர் டிரம்ப்-க்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. சுதாரித்துக் கொண்ட டிரம்ப் தனக்கு மருத்துவ உதவி வேண்டும் என்று தனது மைக்ரோபோனில் மெல்லிய குரலில் கேட்டார்.
இதையடுத்து அவரை அங்கிருந்து மீட்ட மருத்துவ குழு அவருக்கு முதலுதவி செய்தது. பின்னர் ஆசுவாசப்பட்டவராக உணர்ந்த டிரம்ப் அங்கு வெப்பம் அதிகமாக இருக்கிறது என்றார்.
தேர்தல் பரப்புரையின் போது துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர்பிழைத்த டிரம்ப், பொதுவெளியில் பேசும் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு, உரையை நிறுத்திய சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.