தமிழ் பொது வேட்பாளருக்கு பூரண ஆதரவு: சிறிதரன் உறுதி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சிறீதரனால் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும்.
தமிழ் மக்கள் காத்திரமான ஒரு செய்தியை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வழங்க வேண்டும்" என சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சி என்ன முடிவை எப்போது எடுத்தாலும் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். கட்சி முடிவை எடுக்கிறதோ எடுக்கவில்லையோ அல்லது எடுக்கும் முடிவு மக்களிடமிருந்து எவ்வளவு தூரம் எம்மை தள்ளப்போகிறது என்பதை தமிழ் மக்கள் தீர்மானிப்பார்கள்.
அதேவேளை, கருத்து தெரிவித்த அரியநேத்திரன், தான் களமிறங்கும் சங்கு சின்னத்தை சிபாரிசு செய்தவர் சிறீதரன் என குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.