தமிழ் பொதுவேட்பாளரால் கடும் அழுத்தம்: பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்கள் வந்தவண்ணமுள்ளன!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
3 months ago
தமிழ் பொதுவேட்பாளரால் கடும் அழுத்தம்: பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்கள் வந்தவண்ணமுள்ளன!

தமிழ் பொது வேட்பாளரால் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள். நாம் அவர்களுடன் பேசுவோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடக பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (24.08) இடம்பெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் சம்மந்தமான விடயங்களை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. எமது பொது வேட்பாளரது பிரச்சார நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றியும், பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டதால் தென்பகுதியில் ஏற்படுகின்ற அழுத்தங்களின் பிரகாரம் தென்பகுதியின் பிரதான வேட்பாளர்களிடம் இருந்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளுக்கான அழைப்புக்களும், கோரிக்கைககளும் வந்தவண்ணமுள்ளன.

பேச்சுவார்த்தை சம்மந்தமான விடயங்களை எப்படி நாங்கள் கையாள்வது என்பது பற்றியும் ஆராயப்பட்டது. இது மிகவும் ஆக்க பூர்வமான சந்திப்பாக இடம்பெற்றது. நிறைய கருத்துக்கள் பரிமாற்றப்பட்டன. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரையும், அதே நேரம் வரும் பேச்சுவார்த்தைகளையும் எவ்வாறு கையாள்வது பற்றியதான அனுமதியையும், ஆலோசனைகளையும் மத்திய குழு வழங்கியுள்ளது.

அத்துடன், பொதுவேட்பாளரை நாம் கைவிடுவதற்கான சாத்தியம் இல்லை. ஆனால் எங்களுக்கு அழைக்கப்படுகின்ற பேச்சுவார்த்தைகளில் எமது மக்கள் எதற்காக பொது வேட்பாளரை நிறுத்தினார்களோ அல்லது எந்த விடயங்களை நிறைவேற்ற வேண்டும் என பொது வேட்பாளரை நிறுத்தினமோ அந்த கோரிக்கைகள் அனைத்தையும் பிரதான வேட்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டியது எமது கடமை. அந்த விடயத்தை எப்படி கையாள வேண்டும் என முடிவு எடுத்துள்ளோம்.

பொதுவேட்பாளர் இல்லாத நிலையில் நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தைகள் என்பது வலிந்து சென்று அவர்களிடம் கையேந்துவது போன்ற ஒரு நிலமையை ஏற்படுத்தும். பொதுவேட்பாளரை களமிறக்கிய பின்னர் அவர்ககளுக்கு ஏற்பட்டிருக்கின்ற அழுத்தம் முக்கியமானது. தெற்கில் இருக்கக் கூடிய வாக்குகள் சமமாக பிரிந்து செல்கின்ற போது பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள் அதிகபட்ச வாக்குகளை வழங்கினால் தங்களுக்கு இரண்டாவது கணக்கீட்டில் கூட வெற்றி இல்லாத நிலை வரலாம் என அவர்கள் உணர்கிறார்கள்.

ஆகவே, பொதுவேட்பாளரை களமிறக்கிய பின் உறுதியான நிலமை இருக்கிறது. அது வெற்றியளித்துள்ளது. இதற்கு பின்னர் அவர்களுடைய அழைப்புக்கள் தொடர் தேர்ச்சியாக வருகிறது. இதில் பலமான நிலையில் இருந்து எமது கோரிக்கைகளை முன்வைக்க முடியும் என்பது எங்களது நிலைப்பாடு.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான பல்வேறு விதமான கருத்துகள் நிலவுகின்றன. இருப்பினும் கட்சி எடுத்த பொது முடிவில் தான் நாம் பயணிக்கின்றோம். தமிழரசுக் கட்சியில் பலர் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். பிரச்சார கூட்டங்களில் கூட கலந்து கொண்டுள்ளார்கள். காலபோக்கில் எமக்குள் இந்த விடயத்தில் இருக்கும் முரண்பாடுகள் சீர்செய்யப்பட்டு அவர்களும் எங்களுடன் இணைந்து பயணிப்பார்கள் என நம்புகின்றோம்.

நாம் முன்வைக்கும் கோரிக்கைகைளை எவ்வளவு தூரம் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதை பொறுத்து தான் இரண்டாவது விருப்பு வாக்கு தொடர்பில் தீர்மானிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தம் கருணாகரன், பேச்சாளர் சுரேன் குருசாமி உள்ளிட்ட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!