சுவிஸ் ஜேர்மன் எல்லையில் பதற்றநிலை
ஜேர்மனி தனது அனைத்து எல்லைகளிலும் எல்லைக் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்துள்ள விடயம், பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
ஜேர்மனியில் சமீபத்தில் சிரிய இஸ்லாமியவாதி ஒருவர் தாக்குதல் நடத்தியதில் மூவர் கொல்லப்பட்ட விடயத்தைத் தொடர்ந்து, அந்நாடு தனது அனைத்து எல்லைகளிலும் எல்லைக் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தது.
இதற்கிடையில், சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனிக்கிடையில் செய்துகொள்ளப்பட்டுள்ள நீண்டகால ஒப்பந்தம் ஒன்றின்படி, ஜேர்மன் பொலிசார் சுவிட்சர்லாந்தில் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, Basel Badischer மற்றும் Basel Main Station ஆகிய இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையில் ஜேர்மன் பொலிசார் பணியில் ஈடுபடுகிறார்கள். அப்படி ஜேர்மன் பொலிசார், எல்லையில் சோதனைகளில் ஈடுபடும்போது, ஜேர்மனிக்குள் நுழைந்து புகலிடம் கோர விரும்பும் நூற்றுக்கணக்கானோரை ஜேர்மனிக்குள் நுழைய அனுமதி மறுக்கிறார்கள்.
ஆக, அவர்கள் ஜேர்மன் பொலிசாரால் சுவிட்சர்லாந்திலேயே தடுத்து நிறுத்தப்படுவதால், இந்த பிரச்சினை சுவிட்சர்லாந்தின் பிரச்சினையாகிவிடுகிறது. இந்நிலையில், இந்த நடைமுறை மாற்றப்படவேண்டும் என பேசல் மாகாண கவுன்சிலரான Petra Gössi என்பவர் கூறியுள்ளார்.
சுவிஸ் மண்ணில் புலம்பெயர்வோர் இடைமறிக்கப்படும் விடயம் அதிர்ச்சியளிப்பதாகவும், அவர்களை சுவிஸ் அதிகாரிகள் கையாளவேண்டும் என்றும், சுவிட்சர்லாந்து இந்த விடயம் தொடர்பில் ஜேர்மனியுடன் உறுதிப்பட பேச்சுவார்த்தை நடத்தியாகவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.