இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த படைத் தளபதி கொலை
லெபனானில் பேஜர் கருவிகள் மற்றும் வாக்கி டாக்கி கருவிகள் வெடித்துச் சிதறிய சம்பவங்களில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்பட 37 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்றும் இது முழுமையான போர் பிரகடனம் என்றும் ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, வடக்கு இஸ்ரேலிய பகுதிகள்மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் 140 ராக்கெட்டுகளை சரமாரியாக ஏவி பதில் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலின் விமான படைத்தளங்கள் குறிவைக்கப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்தது.
இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த படைத்தளபதி இப்ராகிம் அகில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
1983-ம் ஆண்டு பெய்ரூட்டின் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தி 63 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான இப்ராகிம் அகில் குறித்த தகவலுக்கு 7 மில்லியன் டாலர் தொகையை அமெரிக்கா பரிசாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.