அமெரிக்காவில் மீண்டும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
அமெரிக்காவில் தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம் கொத்து கொத்தாக மக்களின் உயிர்களைப் பறித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அலபாமா மாகாணத்தில் இன்று நடத்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் டசன் கணக்கான மக்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆயுதமேந்திய மர்ம நபர்கள் நேற்று இரவு 11 மணியளவில் பிரம்பிங்கம் [Birmingham] மாவட்டத்தில் உள்ள பைவ் பாயிண்ட்ஸ் [Five Points] பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நடைபாதையில் குண்டடிபட்டு மயக்கமாகக் கிடந்த இரண்டு ஆண்கள் மற்றும் பெண்ணை பார்த்துள்ளனர். மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும் குண்டடிபட்ட மற்றொரு நபர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடும் பணியில் போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.
அமெரிக்காவில் இந்த வருடம் மட்டும் இதுபோன்ற 403 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் [mass shootings] பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வன்முறைகளில் இந்த ஒரே வருடத்தில் சுமார் 12,416 பேர் உயிரிழந்துள்ளதாக கன் வயலன்ஸ் ஆர்கைவ் [GVA] என்ற அமைப்பின் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.