வெளிநாட்டவருக்கு எதிராகத் திரும்புகிறதா சுவிஸ்? - சுவிசிலிருந்து சண் தவராஜா

#swissnews
Mayoorikka
2 weeks ago
வெளிநாட்டவருக்கு எதிராகத் திரும்புகிறதா சுவிஸ்? - சுவிசிலிருந்து சண் தவராஜா

உலகில் வாழ்வதற்குச் சிறந்த நாடுகளின் பட்டியல் அண்மையில் ஊடகங்களில் வெளியாகி இருந்தது. 'பூவுலகின் சொர்க்கம்' என அழைக்கப்படும் சுவிற்சர்லாந்து அந்தப் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறை முதல் இடத்தைப் பிடித்திருந்தது. 

யு.எஸ். நியூஸ் அன்ட் வேல்ட் றிப்போர்ட் ஊடக நிறுவனம் பென்னிசில்வேனியா வார்ட்டன் பல்கலைக் கழகத்துடன் இணைந்து 89 நாடுகளை மையப்படுத்தி இந்த ஆய்வை நடத்துகிறது. கடந்த 9 வருடங்களில் சுவிற்சர்லாந்து 7 தடவைகள் பட்டியலில் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அது மாத்திரமன்றி இந்த ஆய்வில் வெளியிடப்பட்ட துணைப் பட்டியல்களிலும் சுவிற்சர்லாந்து குறிப்பிடத்தக்க இடங்களைப் பெற்றுள்ளது. 

உலகில் சிறப்பான வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தையும், தொழில்தருநர்களுக்கு அதிக வாய்ப்பை வழங்கும் நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தையும் சுவிஸ் பெற்றிருக்கின்றது. சிறந்த நாடுகளின் பட்டியலில் ஓரு நாட்டை இணைத்துக் கொள்வதற்குப் பல அளவு கோல்கள் உள்ளன. வாழ்க்கைத் தரம், நிலையான அரசியல், தொடர்ந்து சீராக வளர்ச்சி காணும் பொருளாதாரம், புத்தாக்கலை ஊக்குவித்தல், கலாசாரத்தின் செல்வாக்கு உள்ளிட்ட 10 அம்சங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவிலேயே குறித்த பட்டியலில் சுவிஸ் முதலாமிடத்தைப் பெற்றுள்ளது. சுவிஸ் நாட்டில் வாழும் பெரும்பாலான மக்களும், சுவிஸ் நாட்டுக்கு ஒரு தடவையேனும் வந்து சென்றவர்களும் இதனை நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள்.

 சுவிஸ் நாட்டின் பெருமையைப் பறைசாற்றும் இந்த அறிக்கை வெளியான ஒரு சில நாட்களிலே சுவிஸ் நாட்டில் ஒரு சிலருக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட ஒரு துண்டுப் பிரசுரம் இந்த அறிக்கையைக் கேள்விக்கு உட்படுத்தி உள்ளது. சுவிஸ் நாட்டில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்பை உமிழும் இந்தத் துண்டுப் பிரசுரம் யாரால் அனுப்பி வைக்கப்பட்டது என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை. ஆனாலும் அது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. 8.9 மில்லியன் மக்கள் வாழும் சுவிஸ் நாட்டில் 21 விழுக்காடு மக்கள் வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்டவர்கள். 

இரண்டாம் உலகப் போர் காலத்திலும் அதற்குப் பிந்திய உலகப் போக்கு காரணமாகவும், அகதிகளை வரவேற்றுக் கொள்ளும் சுவிஸ் நாட்டின் கொள்கை காரணமாகவும் உலகின் பல நாடுகளையும் சேர்ந்த பெருமளவு மக்கள் இங்கு குடியேறி உள்ளனர்.

 21ஆம் நூற்றாண்டிலும் அகதிகளின் வருகை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மேற்குலக நாடுகளில் அகதிகளுக்கு எதிரான போக்கு நிலவுவது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற நடனப் பாடசாலை மீதான ஒரு தாக்குதலை அடுத்து வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்டவர்கள் மீது பரவலான தாக்குதல்கள் நடைபெற்றதை நாமறிவோம். தாக்குதலை நடத்தியவர் ஒரு இஸ்லாமியர் என்ற வதந்தியைப் பரப்பிய தீவிர வலதுசாரிக் குழுக்கள் வெளிநாட்டவர்கள் மீதான தாக்குதல்களை நடத்தியிருந்தன. 

காவல்துறையினால் உண்மையான குற்றவாளி கைது செய்யப்பட்டு அவர் இஸ்லாமியர் இல்லை என்ற தகவல் வெளியிடப்பட்ட பின்னரும் கூட இந்தத் தாக்குதல்கள் நீடித்ததைப் பார்க்க முடிந்தது. எனவே மேற்குலகின் ஒரு அங்கமான சுவிஸ் நாட்டில் இருந்து வெளிநாட்டவர்களுக்கு எதிரான பிரசுரம் ஒன்று வெளியாகியமை ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல. ஆனால், இந்தப் பிரசுரத்தில் உண்மையிலேயே ஆச்சரியம் கலந்திருந்தது. 

இந்தப் பிரசுரத்தை வெளியிட்டவர்கள் அகதிகளுக்கு எதிராகவோ தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு எதிராகவோ தமது கோசத்தை முன்வைக்கவில்லை. மாறாக, ஐரோப்பாவில் இருந்து சுவிஸ் நாட்டுக்கு குடிபெயர்பவர்களுக்கு எதிராகவே குரலெழுப்பி இருந்தார்கள். ''வெளிநாட்டவர்கள், நீங்கள் சட்ட விரோதிகள்'' என்ற தலைப்பில் யேர்மன் மொழியிலும் ஆங்கிலத்திலுமாக எழுதப் பட்டிருந்த பிரசுரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

 ''2014ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து சுவிசுக்குப் படையெடுப்பவர்களுக்கு எதிராக மக்கள் வாக்களித்திருந்தார்கள். ஆனால் தொழில் வழங்குநர்கள் மற்றும் பொருளாதார பரப்புரையாளர்களின் அழுத்தம் காரணமாக அரசியலமைப்புக்கு விரோதமாக உங்கள் அரசாங்கங்கள் அதனை உதாசீனப்படுத்தி விட்டன. எங்கள் அழகான நாட்டை நீங்கள் வெளிநாட்டவரின் தொற்றுக்கு ஆளான - சனத்தொகை அதிகமான (20 ஆண்டுகளில் 21 விழுக்காடு) - பெருட்களின் விலைகள் அதிகரித்த - கலாசாரத்தால் பேதப்படுத்தப்பட்ட மலக்குழியாக - ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் அதிகூடிய வெளிநாட்டவர்களைக் கொண்ட நாடாக மாற்றியிருக்கிறீர்கள்.

 இதனால்தான் இறுதியாக நடைபெற்ற தேர்தல் முடிவுகளின் படி 78.2 விழுக்காடு மக்கள் வெளிநாட்டவர்களை வெளியேறுமாறு (கெட்ட வார்த்தை) கோரியிருக்கிறார்கள். ... 2025 இல் கலவரங்கள் வெடிக்கும் ... அது நடந்தே தீரும்.'' சுவிஸ் நாட்டின் இலவசப் பத்திரிகையான '20 நிமிடங்கள்' இந்தப் பிரசுரம் தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தது. 

ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு இந்தப் பிரசுரம் அனுப்பப்பட்டிருந்தது. அனுப்பியவர் எதனால் அவரைத் தெரிவு செய்தார் என்பது தெரியாத போதிலும், ஆசிரிய பீடத்தில் பணிபுரியும் வெளிநாட்டுப் பெயரைக் கொண்ட ஒருவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து வேறு பலரும் தங்களுக்கு இந்தப் பிரசுரம் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரசுரத்தில் 'எதிர்ப்புக் கூட்டமைப்பு 78பி' எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பெயருடன் கூடிய அமைப்பு எதுவும் சுவிசில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. 

இதுவரை அறியப்படவும் இல்லை. தீவிரவாதம் தொடர்பிலான ஆராய்ச்சியாளர் டிர்க் பையரை பத்திரிகை தொடர்பு கொண்டு இது தொடர்பில் கருத்துக் கேட்டிருந்தது. இது Junge Tat (இளையோர் செயற்பாடு) என்ற வலதுசாரி அமைப்பின் வேலையாக இருக்கக் கூடும் என்கிறார் அவர். சுவிஸ் நாட்டின் பிரதான கட்சியும், வலதுசாரிக் கொள்கை கொண்டதுமான சுவிஸ் மக்கள் கட்சியுடன் தொடர்புடைய ஒரு அமைப்பே 'இளையோர் செயற்பாடு' எனப் பரவலாகக் கருதப்படுகின்றது. டிர்க் பையரைப் பொறுத்தவரை இது அவர்களின் வேலையாகத்தான் இருக்கக் கூடும் என அவர் திடமாக நம்புகிறார். இது தனியொருவரின் வேலையாக இருக்க முடியாது. ஒரு குழுவின் திட்டமிட்ட செயற்பாடே இது என அவர் உறுதியாக நம்புகிறார். இந்த அமைப்பை 20 நிமிடங்கள் தொடர்பு கொண்டபோது தாங்கள் இத்தகைய பிரசுரம் எதனையும் வெளியிடவில்லை எனத் தெரிவித்தனர். 

வெளிநாட்டுக் குடியேறிகள் தொடர்பில் நடைபெற்ற மக்கள் வாக்கெடுப்பு நியாயமானது, ஜனநாயக நடைமுறைக்கு உட்பட்டது, அது இனவெறி சார்ந்தது அல்ல எனக் கருத்துரைத்த அந்த அமைப்பின் பிரதிநிதிகள் பிரசுரத்தை எழுதியவர்களின் அதிருப்தியைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றனர். அதேவேளை வன்முறையை தாம் ஆதரிக்கவில்லை எனவும் தெரிவித்தனர். சூரிச் மாநிலக் காவல்துறை இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது. குறித்த பிரசுரத்தை வெளியிட்டவர்களை அவர்கள் சிலவேளைகளில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக் கூடும். ஆனால் குறித்த பிரசுரம் சொல்லும் சேதி கவனத்துக்கு உரியது. இன்று ஐரோப்பியக் குடியேறிகளுக்கு எதிராக எழும் கோசம் நாளை ஒட்டுமொத்த வெளிநாட்டவர்களுக்கும் எதிராகக் கூட எழலாம்.

 அதற்கு முன்னதாக இந்தப் போக்குக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். எனவே இது தொடர்பில் நாடு தழுவிய கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும். இந்தப் பிரசுரத்தை வெறுமனே புறந்தள்ளி விடுவதால் இது போன்ற போக்கைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை சுவிஸ் நடுவண் அரசும், சுவிஸ் நாட்டு மக்களும் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

 அதேவேளை, சுவிஸ் நாட்டில் வாழும் தமிழ் மக்களும் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுவது அவசியம். புலம்பெயர் வாழ்வு நிரந்தரமாகிவிட்ட சூழலில், இரண்டாவது தலைமுறைப் பிள்ளைகள் சுவிஸ் மண்ணில் காலூன்றிவிட்ட நிலையில் அவர்களின் எதிர்காலம் தொடர்பிலான அக்கறை அனைவருக்கும் இருத்தல் அவசியம். சுவிஸ் மக்களோடு இணைந்தும் பிணைந்தும் வாழும் தமிழர்கள் இது தொடர்பிலான கருத்துப் பரிமாற்றத்தை அவர்களோடு நிகழ்த்துவதன் ஊடாக எதிர்கால அபாயத்தைத் தடுத்துவிடக் கூடிய வாய்ப்புக் கிட்டலாம்.

 இந்த வேளையில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் யேர்மனியரான கிறிஸ்தவ மதபோதகர் மார்ட்டின் நீமொல்லர் எழுதிய கவிதை வரிகளை நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை. முதலில் அவர்கள் கம்யூனிஸ்ட்களைத் தேடி வந்தார்கள் நான் குரல் எழுப்பவில்லை ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல பிறகு அவர்கள் சோசலிசவாதிகளைத் தேடி வந்தார்கள் நான் குரல் எழுப்பவில்லை ஏனெனில் நான் சோசலிசவாதி அல்ல பிறகு அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள் நான் குரல் எழுப்பவில்லை ஏனெனில் நான் தொழிற்சங்கவாதி அல்ல பிறகு அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள் நான் குரல் எழுப்பவில்லை ஏனெனில் நான் யூதன் அல்ல பிறகு அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள் எனக்காகக் குரலெழுப்ப யாருமே இருக்கவில்லை.

- சுவிசிலிருந்து சண் தவராஜா

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!