பல்கலைக்கழகங்களில் நிகழும் பகிடிவதை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை!
அரச பல்கலைக்கழகங்களில் நிகழும் பகிடிவதை சம்பவங்களை தவிர்ப்பதற்கு வழிகாட்டுதல் தொகுப்பொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்களை ஒழிப்பதற்கான வழிகாட்டுதல்களைத் தயாரிப்பதற்கான உத்தரவு ஒன்றை வௌியிடுமாறு கோரி, 2020 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவொன்று, ஜயந்த ஜயசூரிய, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கலாநிதி அவந்தி பெரேரா, அரச பல்கலைக் கழகங்களில் நிகழும் பகிடிவதை சம்பவங்களைத் தடுப்பதற்காக வழிகாட்டுதல் தொகுப்பொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதன்போது, வழிகாட்டுதல் தொகுப்பினை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி, ஏதேனும் திருத்தங்கள் முன்மொழியப்பட்டால், அவற்றைப் பெற்று இறுதி வரைவைத் தயாரிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
இறுதி வரைவை தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.