ஹெஸ்பொல்லாவின் கருத்தை மறுத்த ஈரான்
இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது தாக்குதல் நடத்தினர். காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் வடக்குப் பகுதியில் உள்ள லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
அதனால் இஸ்ரேல் வடக்குப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வடக்குப் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை மீண்டும் அதே இடத்தில் பாதுகாப்பாக குடிமயர்த்துவதுதான் இலக்கு என இஸ்ரேல் தெரிவித்தது.
அந்த அறிவிப்பு வெளியான அடுத்தடுத்த நாளில் ஹிஸ்புல்லா பயன்படுத்தி வந்த பேஜர்கள், வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறின. அதன்பிறகு ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின் இரண்டு முக்கிய கமாண்டர்களை இஸ்ரேல் தாக்கி கொன்றுள்ளது. மூன்று நாட்களாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்துமாறு ஈரானை வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், தற்போது அதற்கான நேரம் இல்லை என இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.