வியட்நாமில் உள்ள உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் தொற்றால் பல உயிரினங்கள் பலி
தெற்கு வியட்நாமில் உள்ள உயிரியல் பூங்காவில் நாற்பத்தேழு புலிகள், மூன்று சிங்கங்கள் மற்றும் ஒரு சிறுத்தை ஆகியவை எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாங் அன் மாகாணத்தில் உள்ள தனியார் மை குயுஹ்ன் சஃபாரி பூங்கா மற்றும் ஹோ சி மின் நகருக்கு அருகில் உள்ள டோங் நாயில் உள்ள வியோன் சோய் மிருகக்காட்சிசாலையில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக அதிகாரப்பூர்வ வியட்நாம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, விலங்கு சுகாதார நோயறிதலுக்கான தேசிய மையத்தின் சோதனை முடிவுகளின்படி, விலங்குகள் "H5N1" வகை A வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன.
இருப்பினும், விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த எந்த மிருகக்காட்சிசாலை ஊழியர்களுக்கும் சுவாச அறிகுறிகள் எதுவும் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு 2022 முதல், எச்5என்1 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் பாலூட்டிகளிடையே பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறுகிறது.
H5N1 நோய்த்தொற்றுகள் மனிதர்களுக்கு லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம், மேலும் சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.