ஜனாதிபதி, இந்தியாவுக்கு வழங்கியுள்ள உறுதி!
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமாக இலங்கைப் நிலப்பரப்பு ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடனான சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜெய்சங்கர், இலங்கையின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணுவதன் மூலம் சமத்துவம், நீதி, மரியாதை மற்றும் அமைதிக்கான தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூகங்களின் அபிலாஷைகளுக்கும் இந்தியாவின் ஆதரவை வலியுறுத்தினார்.
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாகவும் வினைத்திறனாகவும் அமுல்படுத்துவதும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதும் இந்த நோக்கங்களை இலகுவாக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.