இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த மொரிசியஸ் பிரதமர்
இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பிராந்தியம். இது சுமார் 60 குட்டித் தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டம்.
இதுதொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வந்தது. பிரிட்டன் மற்றும் மொரீசியஸ் இடையே நீண்ட காலம் நடந்த பேச்சுகளுக்கு பின் இந்த நிலப்பரப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள டியாகோ கார்சியா பகுதி அடுத்த 99 ஆண்டுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவத்தின் கூட்டு தளமாக தொடர்ந்து இருக்கும்.
இந்தப் பிராந்தியத்தில் மிக முக்கிய போர்க்களமாக, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தளமாக டியாகோ கார்சியா உள்ளது.
அதை ஒட்டியுள்ள சாகோஸ் தீவுகளை மொரிசியஸ் நாட்டுக்கு விட்டுத்தர பிரிட்டன் முன்வந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முடிவை இந்தியா வரவேற்றுள்ளது.
இந்நிலையில், சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரிசியசிடம் ஒப்படைத்ததற்கு மொரிசியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத், நமது காலனித்துவத்தை நிறைவு செய்ததற்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, மொரிசியஸ் பிரதமர் ஜுக்நாத் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்பிரிக்க யூனியன் மற்றும் இந்திய அரசு உள்பட நமது காலனித்துவ நீக்கத்தை முடிப்பதற்கான போராட்டத்தில் எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து நட்பு நாடுகளுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.