இலங்கையில் வீழ்ச்சியடையும் விவசாய துறை : கொத்தாக வெளியேறும் மக்கள்!
இலங்கையில் விவசாயத் துறையில் ஒரு வருடத்திற்குள் 100,000 இற்கும் அதிகமானோர் தமது வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டில் விவசாய துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளால் விவசாய வேலைகளை விட்டு மக்கள் வெளியேறுவதுடன் நாட்டிற்கு தேவையான விவசாய பொருட்களின் உற்பத்தியும் குறைவடைந்து வருகின்றது.
இந்நிலை நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடத்தில் சுமார் 147,989 பேர் விவசாயத் துறையை விட்டு வெளியேறியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், விவசாயத் துறையில் பணிபுரிந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,187,563 ஆக இருந்தது. இது 2024 முதல் காலாண்டில் 2,139,574 ஆகக் குறைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், விவசாயத் துறையில் வேலைவாய்ப்பு மொத்த வேலைவாய்ப்பில் 26.7% ஆக இருந்தது. ஆனால் 2024 முதல் காலாண்டில், இது 25.8% வீழ்ச்சியைக் காட்டுகிறது.