ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படுத்த நடவடிக்கை!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு நாட்டில் மீண்டும் இவ்வாறானதொரு அவலம் ஏற்படாத வகையில் பின்னணி அமைக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் இன்று (06) இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை அவர் அங்கு உறுதியளித்தார்.
அண்மைக்காலமாக இந்த நாட்டில் இடம்பெற்ற பாரிய அவலமான ஈஸ்டர் தாக்குதல் சம்பவமானது காலத்தின் மணலில் புதைந்துள்ள போதிலும் அதனை துடைத்தெறிய ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கு செல்வாக்கு செலுத்திய காரணிகளில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நீதி மற்றும் நீதிக்கான எதிர்பார்ப்பும் இருந்ததாக தாம் நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த நாட்டின் பிரஜைகளின் நோக்கம், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை என்பன தனது சொந்த நோக்கம், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை ஒன்றே எனத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் நீதி மற்றும் நியாயத்தை நிறைவேற்றுவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
அரசியல் மாற்றத்துக்காகவே இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கருத்து சமூகத்தில் நிலவுவதாகவும், அரசியல் நோக்கத்திற்காக நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியாகுமானால் அது பாரிய அவலமாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டில் அரசியல் மிகவும் உச்சநிலையில் இருந்தால் முதலில் அந்த நிலைமையை களைய வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இத்தாக்குதலில் அன்றைய அரசாங்க இயந்திரமும் ஈடுபட்டதாக சமூகத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் எமது நாடு எப்பொழுதும் பாதுகாப்பற்ற மற்றும் மிகவும் ஆபத்தான நிலைமையில் தான் இருக்கும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.