பாணந்துறையில் 20 சீன பிரஜைகள் கைது : மடிக் கணனிகள் உட்பட பெறுமதியான பொருட்கள் மீட்பு!
மேற்கு புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறை, கோரக்கன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 20 சீன பிரஜைகள் பாணந்துறை வடக்கு பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 5 மடிக்கணினிகள், 437 கையடக்கத் தொலைபேசிகள், தராசுகள், 332 USB கேபிள்கள், 133 கையடக்க தொலைபேசி சார்ஜர்கள், 21 USB வயர் கம்பிகள், 17 ரவுட்டர்கள், 2 ஐபோன்கள் மற்றும் பல சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து உணவு எடுத்து வந்ததாகவும், இருபது இலட்சம் மாத வாடகை அடிப்படையில் அந்த விடுதியில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இன்று (09) பாணந்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
நிதிக்குற்றத்தை அவர்கள் செய்துள்ளார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒக்டோபர் 6ஆம் திகதி, ஹங்வெல்ல பொலிஸ் பிரிவில் இணையவழியில் முறைப்படுத்தப்பட்ட பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சீன பிரஜைகளுக்கும் இன்று கைது செய்யப்பட்ட சீன பிரஜைகளுக்கும் தொடர்பு உள்ளதா என குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை வடக்கு பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.