பிரான்சில் சாலை சோதனையின் போது 666 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
A10 நெடுஞ்சாலையில் பயணித்த மூன்று வாகனங்களில் இருந்து 666 கிலோ எடையுள்ள கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Allainville (Yvelines) நகர சுங்கச்சாவடியில் வைத்து BRI (Brigade de recherches et d'intervention) காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
'go-fast' எனும் பொதிவிநியோக நிறுவனத்தின் பெயரில் போலியாக இயக்கப்படும் மூன்று வாகனங்களையே காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில் இருந்து 666 கிலோ கஞ்சாவும், 10 கிலோ கொக்கைனும் மறைத்து எடுத்துச் செல்லப்படுவதை கண்டுபிடித்து வாகனங்களின் மூன்று சாரதிகளையும் கைது செய்தனர்.
இந்த கடத்தல் தொடர்பாக நீண்ட நாட்களாக விசாரணைகளை மேற்கொண்டிருந்த காவல்துறையினர், முகத்தினை அடையாளம் காணும் கண்காணிப்பு கமராவின் உதவியுடன் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வாகனங்கள் ஸ்பெயினில் இருந்து பிரான்சுக்குள் வருகை தந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மூவர் கைதான நிலையில், மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்பெயினில் இருந்து பிரான்சுக்குள் கடத்திவரப்படும் பல போதைப்பொருகள் அண்மையில் பிரான்சில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.